நியூயார்க்: அமேசான் நிறுவனம் தனது நிர்வாகச் செலவுகளைக் குறைக்க மேலும் 16,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய அதிரடி முடிவெடுத்துள்ளது. அமேசான் நிறுவனம் கடந்த 2022ம் ஆண்டு மற்றும் 2023ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பல்வேறு காரணங்களை கூறி சுமார் 27,000 ஊழியர்களைப் பணியிலிருந்து நீக்கியிருந்தது.
அதனைத் தொடர்ந்து, கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதி சுமார் 14,000 பணியிடங்கள் குறைக்கப்பட்டன. அந்தப் பட்டியலில் இடம்பெற்ற ஊழியர்களுக்கான 90 நாட்கள் ஊதியக் காலம் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், நிறுவனத்தின் 30 ஆண்டு கால வரலாற்றிலேயே இல்லாத வகையில், மொத்தம் 30,000 கார்ப்பரேட் பணியிடங்களை ரத்து செய்ய அந்நிறுவனம் தற்போது இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, வரும் 27ம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் சுமார் 14,000 முதல் 16,000 வரையிலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய அமேசான் திட்டமிட்டுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையானது அமேசான் வெப் சர்வீசஸ், ரீடைல், பிரைம் வீடியோ மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை ஆகிய பிரிவுகளில் பணியாற்றும் உயர் அதிகாரிகளையும் சாப்ட்வேர் இன்ஜினியர் உள்ளிட்டோர் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. தற்போது வரை பணிநீக்கத்திற்கான நோட்டீசை சுமார் 1000 முதல் 2000 அமேசான் ஊழியர்கள் பெற்றுள்ளனர்.
