மியாமி: ஈரானுடனான ராணுவ மோதல் மிகக் குறுகிய காலப் பயணமாகவே அமையும் என்று அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ என்ற பெயரில் கடந்த பிப். 28ம் தேதி கூட்டு ராணுவ நடவடிக்கையை ஈரானுக்கு எதிராகத் தொடங்கின. ஈரானின் அணுசக்தி திட்டங்களை முடக்குவது மற்றும் அங்கு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்தத் தீவிரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தொடக்கத்தில் இந்த ராணுவ நடவடிக்கை நான்கு முதல் ஐந்து வாரங்கள் வரை நீடிக்கும் என்று பென்டகன் அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், திட்டமிட்ட காலத்தை விட போர் மிக வேகமாக இலக்கை நோக்கி நகர்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் மியாமியில் உள்ள டோராலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்த ராணுவ நடவடிக்கை மிக வேகமாக முடிவுக்கு வரும் என்று கூறினார். இது தொடர்பாக அவர் பேசுகையில், ‘ஈரானுடனான இந்த ராணுவ மோதல் ஒரு குறுகிய காலப் பயணம் போன்றது. அமெரிக்கப் படைகள் ஏற்கனவே ஈரானின் கடற்படையில் பெரும்பாலான கப்பல்களை மூழ்கடித்துவிட்டன. அந்நாட்டின் விமானப்படை மற்றும் ஏவுகணைத் தளங்கள் 90 சதவீதத்திற்கு மேல் அழிக்கப்பட்டுள்ளன. போர் நடவடிக்கை கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டது. இருப்பினும், ஈரான் நிபந்தனையற்ற முறையில் சரணடையும் வரை எங்களது இறுதி வெற்றி முழுமை அடையாது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்க முயன்றால், அவர்கள் மீண்டு வர முடியாத அளவிற்கு மிகப்பெரிய தாக்குதலை நடத்துவோம்’ என்று தெரிவித்தார்.
கடந்த பிப். 28ம் தேதி நடத்தப்பட்ட தொடக்கக்கட்ட தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டார். அவருக்குப் பிறகு அவரது மகன் மொஜ்தாபா காமேனி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், இந்த நியமனத்தை டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். தற்போது ஈரான் மீது வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் மட்டுமே தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தரைப்படை ஊடுருவல் என்பது கடைசி கட்ட நீண்டகால திட்டமாக மட்டுமே வைக்கப்பட்டுள்ளது.
இந்த மோதலால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 120 டாலர் வரை உயர்ந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், போர் விரைவில் முடிவுக்கு வரும் என்ற டிரம்பின் உறுதியான பேச்சால் சந்தையில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை மீட்கும் பேச்சுவார்த்தைக்காக, ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற முக்கிய உள்கட்டமைப்புகளைத் தாக்காமல் அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஹார்முஸ் ஜலசந்தியை கைப்பற்றுவோம்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, உலக நாடுகளின் பொருளாதாரம் பெரும் சவாலை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக, பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் வெளியேற்றம் காரணமாக கடல்வழி போக்குவரத்து தற்போது முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், ‘உலக நாடுகளுக்கு தேவையான கச்சா எண்ணெய்யில் 20 சதவீதம் கொண்டு செல்லப்படும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் அடைக்க முயன்றால், தற்போது நடக்கும் தாக்குதலை விட 20 மடங்கு கடுமையான தாக்குதலை அமெரிக்கா நடத்தும். ஈரான் மீண்டும் ஒரு நாடாக உருவெடுக்க முடியாத அளவுக்கு அதன் இலக்குகள் அழிக்கப்படும். ஈரான் மீது குண்டுமழை பொய்யும். ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலை நிரந்தரமாக ஒழிக்க, டாடல் விலை உயர்வு என்பது மிகச்சிறிய தியாகமே. ஹார்முஸ் ஜலசந்தியை எங்கள் கட்டுப்பாட்டில் எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். எங்களது இந்த நடவடிக்கை சீனா போன்ற நாடுகளுக்கு ஒரு பரிசாகும், இதை அவர்கள் பாராட்டுவார்கள் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கச்சா எண்ணெய் விநியோகத்தை நிலைப்படுத்த ரஷ்யா மீதான தடைகளை தளர்த்துவது குறித்து ஆலோசித்து வரும் டிரம்ப் நிர்வாகம், எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்க கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளது.
புதினுடன் டிரம்ப் ஆலோசனை
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் நேற்று செல்போன் மூலம் தொடர்பு கொண்டு சுமார் ஒரு மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தினர். இந்த உரையாடலின் போது, ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுடன் தான் நடத்திய ஆலோசனையின் அடிப்படையில், இந்தப் பிரச்னைக்கு விரைவான அரசியல் மற்றும் ராஜதந்திர தீர்வை காண சில திட்டங்களை புதின் முன்வைத்தார். தொடர்ந்து பேசிய டிரம்ப், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் கூட்டு நடவடிக்கை மூலம் ஈரானின் கடற்படை, விமானப்படை மற்றும் தகவல் தொடர்பு கட்டமைப்புகள் 100 சதவீதம் அழிக்கப்பட்டுவிட்டன என்று தெரிவித்தார். மேலும், ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள எரிசக்தி தட்டுப்பாட்டை போக்க, ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள் மீதான கச்சா எண்ணெய் தொடர்பான தடைகளை நீக்குவது குறித்து பரிசீலிப்பதாக டிரம்ப் உறுதியளித்தார். உக்ரைன் விவகாரம் குறித்தும் விவாதித்த டிரம்ப், கிழக்கு ஐரோப்பாவில் நடந்து வரும் இந்த முடிவில்லாத சண்டையை நிறுத்த விரைவான போர்நிறுத்தம் அவசியம் என்பதை மீண்டும் வலியுறுத்தினார். இந்தப் பேச்சுவார்த்தை குறித்து ரஷ்யா வெளியிட்ட அறிக்கையில், ‘இரு நாட்டு தலைவர்களுக்கிடையிலான இந்த உரையாடல் மிகவும் வெளிப்படையாகவும் ஆக்கப்பூர்வமாகவும் அமைந்தது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
