ஈரானின் புதிய உச்ச தலைவராக பதவியேற்ற மொஜ்தபா கமேனி காயம்? இஸ்ரேல், அமெரிக்க ராணுவ தளங்கள், அரபு நாடுகள் மீது பதிலடி தாக்குதல்

 

துபாய்: ஈரானின் உச்ச தலைவராக பதவியேற்ற ஒரே நாளில் மொஜ்தபா கமேனி காயமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே சமயம், நீண்டகால போருக்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ள ஈரான் ராணுவம், இஸ்ரேல், அமெரிக்க ராணுவ தளங்கள், அரபு நாடுகள் மீது தொடர்ந்து பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையேயான போர் 11வது நாளாக நேற்றும் நீடித்தது. அமெரிக்க, இஸ்ரேல் படைகளின் தாக்குதலுக்கு ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேலின் ஜெருசலேமில் நேற்று காலையிலேயே சைரன்கள் ஒலித்தன. டெல் அவிவ் நகரில் பல இடங்களில் குண்டு சத்தங்கள் கேட்டன. இஸ்ரேலின் முக்கியமான ஹைபா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்தும் ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியது. அந்நாட்டின் ராணுவ நிலைகளும் குறிவைத்து தாக்கப்பட்டன.

இதுதவிர, ஐக்கிய அரபு எமிரேட்சில் துபாயிலும், பக்ரைனும் ஏவுகணைகள் வர இருப்பதாக சைரன்கள் எச்சரித்தபடி இருந்தன. சவுதி அரேபியா 2 டிரோன்களையும், குவைத் 6 டிரோன்களையும் சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளது. கத்தார், பக்ரைன் நாடுகளும் ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக தெரிவித்துள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்சின் ருவாயிஸ் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அருகே ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் ஆலையின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இஸ்ரேலும் ஈரான் தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது.

இப்போர் நீடிப்பதாலும், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியிருப்பதாலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது பீப்பாய் 90 டாலராக 24 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சமையல் காஸ், சிஎன்ஜி தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டுள்ளது. வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் எண்ணெய் பயன்பாட்டை குறைக்க அனைவரும் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு பிறப்பித்துள்ளன. போர் நீடித்தால் ஒட்டுமொத்த உலக பொருளாதாரமும் வீழ்ச்சியை நோக்கி செல்லும் என்பதால், ஈரான் போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக மாறியிருக்கிறது.

ஆனால், இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பும், ஈரான் தலைவர்களும் மாறுபட்ட தகவல்களை அளித்துள்ளனர். ஈரானின் 90 சதவீத ஏவுகணைகள், விமானப்படைகள் அழிக்கப்பட்டு விட்டதாகவும், மிக விரைவில் போர் முடிவுக்கு வரும் என்றும் டிரம்ப் நேற்று பேட்டி அளித்தார். மேலும், ஹாஸ்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல்களுக்கு அமெரிக்க போர் கப்பல்கள் பாதுகாப்பு அளிக்கும் என்றும் அவர் உறுதி அளித்தார். எண்ணெய் விநியோகத்தை தடுத்தால் ஈரான் மீதான தாக்குதலை மேலும் 20 மடங்கு தீவிரமாக்கப்படும் என எச்சரித்தார்.

இதற்கு பதிலளித்த ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் எக்ஸ் பதிவில், ‘‘நாங்கள் நிச்சயமாக போர் நிறுத்தத்தை எதிர்பார்க்கவில்லை. ஆக்கிரமிப்பாளர்கள் ஒரு பாடம் கற்க வேண்டும். அப்போதுதான் மீண்டும் ஒருமுறை ஈரானை தாக்க வேண்டுமென நினைத்து கூட பார்க்க மாட்டார்கள்’’ என்றார். ஈரானின் துணை ராணுவமான புரட்சிகர காவல் படை விடுத்த அறிக்கையில், ‘எங்கள் பதிலடியை தீவிரப்படுத்துவோம். இனி மிக சக்திவாய்ந்த ஏவுகணைகள் மூலம் பதிலடி தரப்படும். நீண்ட கால போருக்கு ஈரான் தயாராக இருக்கிறது’ என கூறப்பட்டுள்ளது. எனவே தற்போதைய சூழலில் ஈரான் போர் ஓய்வதற்கான எந்த சாத்தியக்கூறும் இல்லை.

இதற்கிடையே, ஈரானின் புதிய உச்ச தலைவராக நேற்று முன்தினம் பதவியேற்ற மொஜ்தபா கமேனி காயமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரான் டிவி சேனல் வெளியிட்ட செய்தியில் மொஜ்தபாவை ‘எதிரிகளால் காயமடைந்தவர்’ என குறிப்பிட்டுள்ளது. எனவே இஸ்ரேலின் தாக்குதலில் மொஜ்தபா காயமடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

மொஜ்தபாவின் தந்தையும் முன்னாள் உச்ச தலைவருமான அயதுல்லா அலி கமேனி கடந்த 28ம் தேதி போரின் முதல் நாளில் கொல்லப்பட்ட பிறகு இதுவரையிலும் மொஜ்தபா கமேனி தொடர்ந்து ரகசிய இடத்திலேயே இருந்து வருகிறார். இதுவரை அவர் பொது வெளியில் தோன்றவில்லை. அயதுல்லாவுக்குப் பிறகு ஈரானின் உச்ச தலைவராக யார் வந்தாலும் அவரையும் கொல்வோம் என இஸ்ரேல் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

* தாக்குதல் தொடரும்: நெதன்யாகு சபதம்

ஜெருசலேமில் தேசிய சுகாதார மையத்தில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ‘‘ஈரானிய மக்களை கொடுங்கோல் ஆட்சியில் இருந்து விடுவிக்க வைப்பதே எங்கள் நோக்கம். அதுவரையிலும் ஈரானின் எலும்புகளை நொறுக்குவது உறுதி. அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆட்சி மாற்றம் ஏற்படுவது ஈரான் மக்களின் கைகளில் உள்ளது’’ என்றார்.

* ஈரான் மகளிர் கால்பந்து அணிக்கு அடைக்கலம்

ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க ஈரான் பெண்கள் கால்பந்து அணியில் 26 வீராங்கனைகள் கடந்த மாதம் ஆஸ்திரேலியா சென்றனர். அங்கு தங்களின் முதல் போட்டியில் அவர்கள் ஈரான் தேசிய கீதத்தை பாட மறுத்தனர். இது பெரும் பரபரப்பானது. இந்த வீராங்கனைகளை யுத்த கால துரோகிகள் என ஈரான் கடுமையாக சாடியது. அதன்பின் 2வது போட்டியில் வீராங்கனைகள் தேசிய கீதத்தை பாடினர்.

இந்நிலையில், போட்டியில் ஈரான் அணி தோற்றதால், அவர்கள் நாடு திரும்ப வேண்டிய நிலையில், அணியில் 5 வீராங்கனைகளுக்கு ஆஸ்திரேலிய அரசு தங்கள் நாட்டில் அடைக்கலம் கொடுத்துள்ளது. இதுதொடர்பான ஆவணங்களில் கையெழுத்திடும் போது வீராங்கனைகள் சிரித்து கைதட்டும் புகைப்படங்கள் நேற்று வெளியாகின. மற்ற 21 வீராங்கனைகளுக்கும் அடைக்கலம் தர ஆஸ்திரேலிய அரசு தயாராக இருப்பதாக கூறி உள்ளது.

* டிரம்புக்கு மிரட்டல்

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் கப்பல்கள் செல்வதை தடுத்தால் 20 மடங்கு அதிக தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டிய நிலையில் ஈரான் பாதுகாப்பு உயர் அதிகாரி அலி லாரிஜானி நேற்று தனது எக்ஸ் பதிவில், ‘‘ஈரான் தியாக தேசம். உங்கள் வெற்று அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாது. உங்களை விட பெரியவர்களால் கூட ஈரானை ஒழிக்க முடியவில்லை. நீங்கள் ஒழிந்து விடாமல் கவனமாக இருங்கள்’’ என எச்சரித்துள்ளார். டிரம்பை கொலை செய்ய ஈரான் திட்டமிட்டதாக முன்பு குற்றச்சாட்டுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: