ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த குரூஸ் (26), என்ற வாலிபர் கடந்த 21ம் தேதி ஊட்டியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். எங்கிருந்து கஞ்சா கொண்டு வரப்படுகிறது என போலீசார் குரூஸிடம் விசாரணை நடத்தினர். அதற்கு அவர், ஊட்டி நகர போக்குவரத்து பிரிவில் காவலராக பணியாற்றி வரும் நசீர் அகமது (26), என்பவரிடம் வாங்கியதாக தெரிவித்துள்ளார். இதையறிந்து காவலர் நசீர் அகமது தலைமறைவானார். அவரை 3 தனிப்படைகள் அமைத்து கோவையில் வைத்து கைது செய்து ஊட்டி அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இதில் கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே கோட்டதொரை பகுதியை சேர்ந்த மோகனசுந்தரம் என்ற கஞ்சா வியாபாரியிடம் இருந்து வாங்கி வந்து நீலகிரியில் விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அங்கு சென்று மோகனசுந்தரத்தை கைது செய்து, 17 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சா விற்பனை தொடர்பான தகவலை மாவட்ட எஸ்பிக்கு முறையாக தெரிவிக்காத ஊட்டி நகர போக்குவரத்து எஸ்ஐ அருண் கூடலூருக்கும், ஊட்டி நகர மத்திய காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் ஜெயகுமாரை தேவாலா காவல் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்து எஸ்பி நிஷா உத்தரவிட்டுள்ளார்.
