தண்டையார்பேட்டை: திருவொற்றியூர் அடுத்த எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த மீனவர் பழனி (56). இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கடலில் மீன் பிடிப்பதற்காக ராயபுரம் ஷேக் மேஸ்திரி தெருவை சேர்ந்த முத்துகுமரன் என்பவருடைய விசைப்படகில் பழனி, வேலு, மணி, வினோத், தேசக்கண்ணு, மல்லி, ராமச்சந்திரன், நாராயணன், ராஜா உள்ளிட்ட 9 பேர் சென்றனர். அப்போது பழனி குடிபோதையில் இருந்துள்ளார். விசைப்படகில் நின்று கொண்டு சிறுநீர் கழிக்கும்போது தவறி கீழே விழுந்தார். உடனடியாக சக மீனவர்கள் அவரைக் காப்பாற்றி விசைப்படகில் படுக்க வைத்தனர்.
பின்னர் இரவு சாப்பாடு வேண்டாம் என்று தூங்கி உள்ளார். காலையில் எழுப்பியபோது காதில் ரத்தம் வழிந்த நிலையில் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தார். அதைத்தொடர்ந்து உடனடியாக விசைப்படகை காசிமேடு கடற்கரைக்கு கொண்டு வந்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசில் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் பழனி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் காசிமேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
