மோடி கூட்டத்துக்கு ஆட்களை அழைத்து வர ரூ.3 லட்சம்: பங்கு பிரிப்பதில் பாஜவினர் மோதல்; மாவட்ட தலைவர் கார் உடைப்பு

திருக்கோவிலூர்: மோடி கூட்டத்துக்கு ஆட்களை அழைத்து வர வழங்கபட்ட ரூ.3 லட்சத்தை பங்கு பிரிப்பத்தில் ஏற்பட்ட தகராறில் பாஜ மாவட்ட தலைவர் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக மாநிலத் துணைத் தலைவர் உட்பட 3 நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். திருக்கோவிலூர் அடுத்த வீரபாண்டி கிராமத்தை சேர்ந்தவர் தர்மராஜ்(42). விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜ தலைவர். இவருக்கும் திருக்கோவிலூர் அடுத்த முகையூரைச் சேர்ந்த பாஜ மாநிலத் துணைத் தலைவர் ஏஜி.சம்பத்துக்கும் சில மாதங்களாக உள்கட்சி மோதல் இருந்ததாக கூறப்படுகிறது.

நேற்று பிரதமர் மோடி மதுராந்தகம் பொதுக்கூட்டத்திற்கு வருவதற்காக வாகன செலவிற்காக 3 லட்சம் ரூபாயை கட்சி தலைமை மாவட்ட தலைவர் தர்மராஜிடம் கொடுத்ததாக தெரிகிறது. இதில் பங்கு பிரிப்பதில் கட்சி நிர்வாகிகளிடையே சலசலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த சம்பத் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் இரவு வீரபாண்டி கிராமத்தில் உள்ள பாஜ மாவட்ட தலைவர் தர்மராஜ் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார்களை உடைத்துள்ளனர். சத்தம் கேட்டு வீட்டிலிருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ் அரகண்ட நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் கார் கண்ணாடி உடைத்தது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கவும் உயிருக்கு பாதுகாப்பு அளிக்கவும் கோரியிருந்தார். அதன்பேரில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் ஏஜி. சம்பத், மாவட்ட துணைத் தலைவர் தென்னரசு, தொகுதி இணை அமைப்பாளர் லோகநாதன் ஆகிய 3 பேர் மீதும் வழக்குபதிவு செய்த போலீசார், அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: