அமெரிக்கா – கனடா இடையே மோதல்; அமைதி வாரியத்திலிருந்து கனடா நீக்கம்: டிரம்ப் – கார்னி கடும் வாக்குவாதம்

 

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி இடையே உலகப் பொருளாதார மன்ற மாநாட்டில் ஏற்பட்ட மோதல் உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசா மறுசீரமைப்பு மற்றும் உலகளாவிய அமைதியை நிலைநாட்ட ‘அமைதி வாரியம்’ என்ற புதிய அமைப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மையில் தொடங்கினார். இதற்கிடையே, நேற்று, கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு வழங்கப்பட்ட அழைப்பை அதிபர் டிரம்ப் அதிரடியாக ரத்து செய்தார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்ற மாநாட்டில் கார்னி ஆற்றிய உரையே இந்த மோதலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

கார்னி தனது உரையில், ‘பெரிய நாடுகள் தங்களின் பொருளாதார பலத்தைப் பயன்படுத்தி மற்ற நாடுகளை அச்சுறுத்துவதை நிறுத்த வேண்டும்’ என்று அமெரிக்காவைச் சுட்டிக்காட்டிக் பேசினார். இதற்குப் பதிலடி கொடுத்த டிரம்ப், ‘அமெரிக்காவால் தான் கனடா பிழைத்துக் கொண்டிருக்கிறது’ என்று சாடினார். உடனடியாக கார்னி, ‘கனடா அமெரிக்காவால் பிழைக்கவில்லை, கனடா மக்களால் செழிப்பாக இருக்கிறது’ எனத் தெரிவித்தார். மேலும், இந்த வாரியத்தில் நிரந்தர உறுப்பினராக இணைய ஒவ்வொரு நாடும் தலா 100 கோடி டாலர் (சுமார் 8,000 கோடி ரூபாய்) வழங்க வேண்டும் என்ற டிரம்ப்பின் நிபந்தனையை ஏற்க கனடா மறுத்தது.

கனடா சமீபத்தில் சீனாவுடன் மேற்கொண்ட வர்த்தக ஒப்பந்தமும் டிரம்ப்பை ஆத்திரமடையச் செய்தது. தற்போது இந்த வாரியத்தில் துருக்கி, ஹங்கேரி, அர்ஜென்டினா உள்ளிட்ட 35 நாடுகள் இணைந்துள்ள நிலையில், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற நாடுகள் இதில் இணைய மறுத்துவிட்டன. இந்தச் சூழலில் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், ‘மிகவும் கவுரவமான இந்த வாரியத்தில் இணைய கனடாவுக்கு வழங்கப்பட்ட அழைப்பு திரும்பப் பெறப்படுகிறது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: