டாவோஸ்: ‘வரும் 2028ம் ஆண்டில் அல்லது அதற்கு முன்பாக உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்’ என ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டாவோஸ் மாநாட்டில் கூறி உள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோசில் நடந்து வரும் உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்ற ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் கூறியதாவது:
இந்தியாவிற்கு சவால் என்பது 3வது பெரிய பொருளாதாரமாக மாறுவது அல்ல. தனிநபர் வருமானத்தை உயர்த்துவதுதான் சவால். கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் சிறப்பான மாற்றம் ஏற்பட்டுள்ளது. நன்கு சிந்திக்கப்பட்ட, வரையறுக்கப்பட்ட, மிகவும் கவனம் செலுத்தக் கூடிய அந்த செயலாக்கம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இது, டிஜிட்டல், சமூக உள்கட்டமைப்பில் பொது முதலீடு, நாட்டின் வளர்ச்சியுடன் முழு சமூகமும் வளர்ச்சி அடைவதை உறுதி செய்தல், உற்பத்தி மற்றும் புத்தாக்கம், எளிமையாக்குதல் ஆகிய 4 தூண்களின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் நாங்கள் உருவாக்கிய தொழில்நுட்ப தளத்துடன் இணைந்து அடுத்த 5 ஆண்டுகளில் 2 முதல் 4 சதவீத பணவீக்கத்துடன், இந்தியா 6 முதல் 8 சதவீத வளர்ச்சியை உறுதி செய்யும்.
அதே சமயம் எங்களிடம் உள்ள இன்னொரு கவலைக்குரிய விஷயம், பணக்கார நாடுகளில் உள்ள உலகளாவிய கடன் மற்றும் அந்த கடன் சுமை எவ்வாறு வெளிப்படும், அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுதான். எந்த பேரழிவுகளும் இல்லாத பட்சத்தில், 2028ம் ஆண்டிலோ அல்லது அதற்கு முன்பாகவோ இந்தியா உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக வளர்ச்சி அடையும். இவ்வாறு அவர் கூறினார்.
