உடன்குடி: தகாத உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை பலாத்காரம் செய்து கொன்ற தாய் மற்றும் அவரது காதலனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இருளப்பபுரத்தைச் சேர்ந்தவர் சத்யா (32). இவருக்கும், ராஜா என்பவருக்கும் ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. ராஜா இறந்துவிட்டதால், சத்யா 2வதாக அதே பகுதியைச் சேர்ந்த மணி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு சந்தோஷி (4) என்ற மகள் உள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாக சத்யாவும், மணியும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் சத்யாவுக்கு தொடர்பு ஏற்பட்டது. அவருடன் சேர்ந்து வாழ்வதற்காக தனது குழந்தை சந்தோஷியுடன், குலசேகரன்பட்டினம் அண்ணா சிலை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறி உள்ளார்.
அப்போது இங்குள்ள ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அவரை சந்திக்க தினமும் சத்யா சென்றுள்ளார். இந்த பெண்ணை இன்ஸ்டராகிராம் மூலம் காதலித்து வந்த தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தை சேர்ந்த முருகன் மகன் இசக்கிராஜ் (20) என்பவர் வந்துள்ளார். அவருடன் சத்யாவும் பேசி பழகியுள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் தகாத காதலாக மாறியது. இதற்கு இசக்கிராஜின் காதலி எதிர்ப்பு தெரிவிக்கவே, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சத்யா செட்டியாப்பத்து பகுதிக்கு குடிபெயர்ந்து இசக்கிராஜூடன் குடும்பம் நடத்தி வந்தார்.
இந்நிலையில், இவர்களது காதலுக்கு பெண் குழந்தை இடைஞ்சலாக இருப்பதாக கூறி சண்டை ஏற்பட்டுள்ளது. பொங்கலுக்கு ஒருநாள் முன்னதாக சத்யாவை இசக்கிராஜ் பார்க்க வந்துள்ளார். இச்சூழலில் கடந்த 20ம் தேதி பெண் குழந்தை சந்தோஷியை வண்டு கடித்து விட்டதாகக் கூறி உடன்குடி அரசு மருத்துவமனைக்கு சத்யாவும், இசக்கிராஜிம் கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
குழந்தையின் உடல், பிறப்புறுப்புகளில் காயங்கள் இருந்ததால் குலசேகரன்பட்டினம் போலீசாருக்கு டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார், குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததற்கான காயங்கள் காணப்பட்டது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார், பெண் குழந்தையின் தாய் சத்யா, அவரது காதலன் இசக்கிராஜ் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
