கோவை ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை: சடலத்தின் அருகிலேயே அரிவாளுடன் அமர்ந்திருந்த ஆட்டோ டிரைவர் கைது

கோவை: கோவை அருகே ரியல் எஸ்டேட் அதிபரை வெட்டிக்கொலை செய்து சடலத்தின் அருகே அரிவாளுடன் அமர்திருந்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள ஒன்னிபாளையம் கோகுலம் காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ் (50). இவரது மனைவி மேரி. இவர்களுக்கு பிரசாந்த் என்ற மகனும், பீரித்தி என்ற மகளும் உள்ளனர். பிரசாந்த் ஐரோப்பா நாட்டில் வேலை பார்த்து வருகிறார். பிரீத்தி திருமணமாகி பெற்றோருடன் வசித்து வருகிறார். சுரேஷ், துடியலூர் அருகே உள்ள என்ஜிஓஓ காலனியில் ரியல் எஸ்டேட் மற்றும் கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வந்தார்.

இந்நிலையில் மத்தம்பாளையம் அருகே உள்ள தனியார் மதுபான கடைக்கு நேற்று முன்தினம் இரவு மது குடிக்க சுரேஷ் சென்றார். அப்போது இவருக்கும், அதே இடத்தில் மது அருந்திக்கொண்டிருந்த திருமலை நாயக்கன் பாளையம் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தமிழ்ச்செல்வன் (30) என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. சிறிது நேரத்தில் தமிழ்ச்செல்வன் அங்கிருந்து சென்றுவிட்டார். சுரேஷ், போதையில் நடக்க முடியாமல் கடைக்குள்ளேயே படுத்துவிட்டார். இரவு கடை மூடும் நேரம் வந்ததால் ஊழியர்கள் சுரேஷை கடைக்கு வெளியே தூக்கி வந்து படுக்க வைத்துவிட்டு சென்றனர்.

இந்நிலையில், அரிவாளுடன் மீண்டும் அங்கு வந்த தமிழ்ச்செல்வன், சுரேஷின் வலது பக்க கழுத்து மற்றும் முகம், தாடை ஆகிய இடங்களில் வெட்டிக்கொலை செய்தார். பின்னர், சடலத்துக்கு அருகிலேயே அரிவாளுடன் உட்கார்ந்து இருந்தார். கொலை குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைக்கு பயன்படுத்திய அரிவாளுடன் இருந்த தமிழ்செல்வனை கைது செய்தனர்.

Related Stories: