வெயிட் பண்ணுங்க… எந்த கூட்டணினு சொல்றேன்: சஸ்பென்ஸ் வைக்கும் பிரேமலதா

சென்னை: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மதுரையில் எல்ஐசி அலுவலராக இருந்த கல்யாணி என்பவர் தவறை சுட்டி காட்டியதால் உடன் பணியாற்றுகிற ராமகிருஷ்ணன் என்பவர் பெட்ரோல் ஊற்றி கொலை செய்துள்ளார். தீ விபத்து என்று நாடகமாடினார். ஆனால் இன்று புலன் விசாரணை செய்து திட்டமிடப்பட்ட கொலை என்பதை கண்டுபிடித்து அவரை கைது செய்துள்ளனர். அதற்காக தமிழக காவல் துறைக்கும், தமிழக அரசுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறது என்பதில் எங்களை விட நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்கள். அந்த வகையில், உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன். பியூஷ் கோயல் வந்திருக்கிறார், எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த போகிறார் என்றும் நீங்கள் தான் சொல்கிறீர்கள். எங்களுக்கு அப்படி எந்தவிதமான தகவலும் வரவில்லை. இதுதான் உண்மை. அப்படி இருக்கும் போது மீடியாவுக்கு இதுபோன்று தவறான செய்திகளை யார் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்த நிமிடம் வரை யாரும் எங்களை அணுகவும் இல்லை. தொலைபேசியிலும் பேசவில்லை. அவர் எதற்காக இங்கு வந்திருக்கிறார் என்று கூட எங்களுக்கு தெரியாது. கூட்டணி குறித்து இதுவரை நாங்கள் முடிவு செய்யவில்லை. கட்சியினரை கலந்து ஆலோசித்த ஒரு தெளிவான முடிவை விரைவில் அறிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: