கடலூர்: மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் கணவன், மனைவி உள்பட 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த 2014ம் ஆண்டு 7ம் வகுப்பு படித்த 13 வயது மாணவியும் 8ம் வகுப்பு படித்த 14 வயது மாணவியும்கடத்தப்பட்டு விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் 19 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் அரியலூர் மாவட்டம் இடையாக்குறிச்சியை சேர்ந்த சதீஷ்குமார்(40), அவரது மனைவி தமிழரசி(40) ஆகியோர் தலைமறைவானார்கள். இந்த வழக்கு பின்னர் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டு 16 பேருக்கு கடலூர் போக்சோ நீதிமன்றம் சிறை தண்டனை அளித்தது. வழக்கில் இருந்து ஒருவர் விடுவிக்கப்பட்டார்.
இதற்கிடையே தலைமறைவாக இருந்த சதீஷ்குமார் (40), அவரது மனைவி தமிழரசி (40) ஆகியோரை சில மாதங்களுக்கு முன் சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் அளித்த தகவலின்படிபேரில் தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் கபிலன் (35) என்பவரையும் கைது செய்தனர். இவர்கள் மீதான வழக்கு கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி (பொறுப்பு) குலசேகரன் நேற்று தீர்ப்பு கூறினார். இதில், சதீஷ்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.45 ஆயிரம் அபராதம், தமிழரசிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம், கபிலனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து 3 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
