பாலக்காடு, ஜன.21: பாலக்காடு அரசு விக்டோரியாக்கல்லூரி பின் பகுதியில் தொரப்பாளையம் என்ற இடத்தில் பழமை வாய்ந்த ராமர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் நிர்வாகத்தை பாலக்காடு ஆஞ்சநேய சேவா சமதி கவனித்து வருகின்றது. இக்கோயிலில் கடந்த 11 ஆண்டுக்கு முன்னதாக சென்னையிலிருந்து ராமர், லட்சுமணன், சீதை மற்றும் ஆஞ்சநேயர் ஆகிய 4 பஞ்சலோக சிலைகளை பக்தர்கள் ஒருவர் நேர்த்திகடனாக வழங்கியிருந்தார்.
பாலக்காடு கல்பாத்தி சாலையில் அமைந்துள்ள தொரப்பாளையம் பகுதியில் சாலையோரம் இந்த கோயில் அமைந்துள்ளதால் கோயிலின் ஓட்டை பிரித்து உள்ளே குதித்த திருடர்கள் நேற்று முன்தினம் இரவு கொள்ளையடித்து சென்றனர்.
நேற்று காலை பூஜாரி வழக்கம்போல் கோயிலை திறந்து பார்த்த போது கோயில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த பஞ்சலோக விக்ரகங்கள் திருட்டு போனது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து கோயில் நிர்வாகி அளித்த புகாரின் பேரில் விரைந்து வந்த பாலக்காடு டவுன் வடக்கு போலீசார் கைரேகை நிபுணர்குழுவினருடன் ஆய்வு மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை போன சிலைகளின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
