மேட்டுப்பாளையம், ஜன.21: மேட்டுப்பாளையம்,சிறுமுகை வனச்சரகங்களில் ஏராளமான காட்டு யானை,மான், காட்டு மாடு, காட்டுப்பன்றி, சிறுத்தை, புலி, கரடி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகில் உள்ள விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதம் செய்து வருவதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகின்றன.இந்த நிலையில், சிறுமுகை வனப்பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்கு உணவை மற்றும் தண்ணீரை தேடி பரபரப்பான கோத்தகிரி சாலையை கடந்து யானைகள் சென்று வருவது வழக்கம். இதனிடையே நேற்று முன்தினம் மாலை பரபரப்பான ஊட்டி சாலையில் போக்குவரத்துக்கு இடையே குட்டிகளுடன் கூடிய காட்டு யானைகள் கூட்டம் சிறுமுகை வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையை கடக்க முயன்றன.இதனை கண்ட வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த வனத்துறையினர் சாலையின் இரு புறமும் வாகனங்களை நிறுத்தி விட்டு காட்டு யானைகள் சாலையை கடக்க வழிவகை செய்தனர். அதன் பின்னரே, காட்டி யானைகள் சாலையை கடந்து சாவகாசமாக சென்றன.
அதன் பின்னர் வாகன போக்குவரத்து துவங்கியது. நீண்ட நாட்களுக்கு பிறகு கோத்தகிரி சாலையை காட்டு யானைகள் கூட்டம் கடந்து சென்ற நிகழ்வை வாகன ஓட்டிகள் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவிட்டு அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில்,“கோத்தகிரி, ஊட்டி சாலைகளில் தற்போது வனவிலங்குகளின் நடமாட்டம் உள்ளது. இதனால், வனப்பகுதியை ஒட்டியுள்ள சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் பயணிக்க வேண்டும்.வனவிலங்குகளை சாலையின் ஓரத்தில் கண்டால் வாகனங்களை நிறுத்தி விட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதை விடுத்து வனவிலங்குகளை தொந்தரவு செய்யவோ, அதன் அருகில் சென்று புகைப்படம் எடுக்கவோ, செல்பி எடுப்பதோ கூடாது. மீறினால் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.
