திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு கோவிந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தீபக் (41). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் தீபக் கண்ணூர் மாவட்டம் பையனூர் பகுதியில் ஒரு தனியார் பஸ்சில் பயணம் செய்தபோது தன்னிடம் சில்மிஷம் செய்ததாக கூறி ஒரு இளம்பெண் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ பகிர்ந்தார். சிறிது நேரத்திலேயே இந்த வீடியோ வைரலாக பரவியது. 2 நாளில் மட்டும் இந்த வீடியோவை 23 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்தனர்.
தன்னைக் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவுவதை அறிந்த தீபக் மனமுடைந்தார். தான் எந்த தவறும் செய்யவில்லை என்று தன்னுடைய நண்பர்களிடம் இவர் கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த 18ம் தேதி தீபக் தன்னுடைய வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. தீபக் எந்தவித மோசமான செயலிலும் ஈடுபடக் கூடியவர் அல்ல என்றும், வீடியோவை பகிர்ந்த இளம்பெண் சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்பதற்காகவே இந்த செயலில் ஈடுபட்டார் என்றும் பலரும் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் தங்களுடைய மகனின் தற்கொலைக்கு காரணமான இளம்பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தீபக்கின் பெற்றோர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி போலீசில் புகார் செய்தனர். இதன்படி வீடியோ எடுத்த இளம்பெண் மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இந்த விசாரணையில் வீடியோவை பகிர்ந்தது கண்ணூர் மாவட்டம் பையனூரை சேர்ந்த ஷிம்ஜிதா முஸ்தபா என தெரியவந்தது. போலீஸ் வழக்கு பதிவு செய்ததை அறிந்ததும் அவர் தலைமறைவானார். இதைத்தொடர்ந்து ஷிம்ஜிதா முஸ்தபாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
