பிரயாக்ராஜ்: உபி பிரயாக்ராஜில் மக மாதத்தையொட்டி பிரசித்தி பெற்ற மக மேளா நடந்து வருகிறது. இதில் புனிதமான மவுனி அமாவாசையை முன்னிட்டு கடந்த 18ம் தேதி திரிவேணி சங்கமத்தில் புனித நீராட சென்ற ஜோதிஷ் பீடத்தின் சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் தனது முகாமிற்கு வெளியே உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இந்நிலையில், மேளா நிர்வாகம் சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், ‘ஜோதிஷ் பீடம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரும் வரை எந்தவொரு மதத் தலைவரும் அப்பீடத்தின் சங்கராச்சாரியராக பட்டாபிஷேகம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்படியிருக்கையில், நீங்கள் எப்படி ஜோதிஷ் பீடத்தின் சங்கராச்சாரியார் என கூறிக் கொள்கிறீர்கள். இதற்கான விளக்கத்தை 24 மணி நேரத்தில் தராவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என கூறப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த சங்கராச்சாரியார் தரப்பு, ‘‘உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முன்பே அவிமுக்தேஸ்வரானந்த் ஜோதிஷ் பீடத்தின் சங்காராச்சாரியராக பட்டாபிஷேகம் செய்யப்பட்டு விட்டது’’ என்றனர்.
