இதுவெல்லாம் சகஜம் என திமிராக பதிலளித்து; மருத்துவமனையில் சிகரெட் பிடித்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏ: நிதிஷ் அரசுக்கு ஆர்ஜேடி கடும் கண்டனம்

பாட்னா: சிறைக் கைதியாக இருந்தும் மருத்துவமனையில் சிகரெட் பிடித்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் மோகாமா தொகுதி ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.வான அனந்த் சிங், ‘சோட்டே சர்க்கார்’ என்று அழைக்கப்படுகிறார். இவர் மீது சுமார் 28 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2022ம் ஆண்டு தகுதி நீக்கம் செய்யப்பட்ட இவர், 2024ம் ஆண்டு பாட்னா உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

இருப்பினும், கொலை வழக்கு ஒன்றில் கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் கைது செய்யப்பட்டு பியூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபடியே 2025ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட இவர், ஆர்ஜேடி வேட்பாளர் வீணா சிங்கை எதிர்த்து 28,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில், உடல் பரிசோதனைக்காக பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் கழக (ஐஜிஐஎம்எஸ்) மருத்துவமனைக்கு அனந்த் சிங் நேற்று அழைத்து வரப்பட்டார்.

அப்போது மருத்துவமனை வளாகத்திற்குள் அவர் சிகரெட் பிடித்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது, ‘இதுவெல்லாம் சகஜம்’ என்று அலட்சியமாக பதிலளித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக நிதிஷ் குமார் தலைமையிலான அரசை எதிர்கட்சியான ஆர்ஜேடி கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

ஆர்ஜேடி செய்தித் தொடர்பாளர் பிரியங்கா பாரதி வெளியிட்ட பதிவில், ‘ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு சிறையிலும் விஐபி கலாசாரம் தொடர்கிறது’ என்று குற்றம் சாட்டினார். மேலும் அனந்த் சிங்கை ‘செல்லப்பிள்ளை வில்லன்’ என்று ஆர்ஜேடி தலைவர்கள் விமர்சித்துள்ளனர். இது குறித்து ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் அசோக் சவுத்ரி கூறுகையில், ‘நான் இன்னும் அந்த வீடியோவைப் பார்க்கவில்லை’ என்று மழுப்பலாக பதிலளித்தார்.

Related Stories: