வளர்ப்பு மகளான நடிகை கைதான நிலையில் பெண்களுடன் நெருக்கமாக இருந்த டிஜிபி சஸ்பெண்ட்: கர்நாடக அரசு அதிரடி

பெங்களூரு: கர்நாடகாவில் அலுவலகத்தில் பெண்களுடன் அத்துமீறிய வீடியோ வெளியானதால் மூத்த ஐபிஎஸ் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கர்நாடக மாநில சிவில் உரிமை அமலாக்கத் துறை டிஜிபியாக பணியாற்றி வருபவர் கே.ராமச்சந்திர ராவ். 1993ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான இவர், ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இவரது வளர்ப்பு மகளும் நடிகையுமான ரண்யா ராவ், துபாயிலிருந்து 14.2 கிலோ தங்கத்தை கடத்தி வந்த வழக்கில் கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.

அந்தச் சமயத்தில் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட ராமச்சந்திர ராவ், கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், டிஜிபி ராமச்சந்திர ராவ் தனது அலுவலகத்தில் சீருடையில் நெருக்கமாக இருந்தபடி பெண்களுடன் அத்துமீறிய மூன்று வீடியோக்கள் நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இது குறித்து உடனடியாக விசாரணை நடத்த முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டதுடன், ராமச்சந்திர ராவை பணியிடை நீக்கம் செய்தும் உத்தரவிட்டார்.

இந்த வீடியோக்கள் போலியானவை என்று மறுத்துள்ள ராமச்சந்திர ராவ், ‘இவை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டவை’ என்று விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும், காவல் துறை உயர் அதிகாரி ஒருவரின் இத்தகைய செயல், மாநிலம் முழுவதும் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன், எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related Stories: