புதுடெல்லி: உலகம் முழுவதும் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் கட்டுக்கடங்காத வெளிநாட்டு நிதி வெளியேற்றங்களுக்கு மத்தியில், பிஎஸ்இ சென்செக்ஸ் நேற்று ஒரே நாளில் 1,066 புள்ளிகள் சரிந்தது. நேற்று முன்தினம் முதல் ஏற்பட்டுள்ள சரிவுடன் கணக்கிடுகையில் 30 பங்குகளைக் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் 1,065.71 புள்ளிகள் அல்லது 1.28 சதவீதம் சரிந்து 82,180.47 நிலைபெற்றது. பகலில் 1,235.6 புள்ளிகள் அல்லது 1.48 சதவீதம் சரிந்து 82,010.58 ஆக இருந்தது. இதனால் பிஎஸ்இ-பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.9,86,093.96 கோடி குறைந்து ரூ.4,55,82,683.29 கோடியாக குறைந்துள்ளது. மொத்தம் 3,503 பங்குகள் சரிந்தன. 780 பங்குகள் முன்னேற்றம் கண்டன. 119 பங்குகள் மாறாமல் இருந்தன. இதனால் முதலீட்டாளர்கள் நேற்று ஒரே நாளில் ரூ.9.86 லட்சம் கோடி இழப்பை சந்தித்தனர்.
