ஒன்றிய அரசுக்கு எதிரான வாசகங்களை நீக்கினார்; கேரளாவிலும் ஆளுநர் அடாவடி: சட்டசபையில் இன்று காலை பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில் ஒன்றிய அரசுக்கு எதிரான வாசகங்களை நீக்கியும், சில வாசகங்களை சேர்த்தும் கவர்னர் உரையை வாசித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் நீக்கப்பட்ட வாசகங்களை முதல்வர் பினராயி விஜயன் மீண்டும் சேர்த்து வாசித்தார். கேரள சட்டசபையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் இன்று காலை தொடங்கியது. கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர் உரையை வாசித்தார். அப்போது ஒன்றிய அரசுக்கு எதிராக குறிப்பிடப்பட்டிருந்த சில வாசகங்களை அவர் நீக்கி வாசித்தார்.

மேலும் சில வாசகங்களை சேர்க்கவும் செய்தார். உரையை வாசித்து முடித்த பின் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர் சபையிலிருந்து புறப்பட்டு சென்றார். அதன் பிறகு சபை மீண்டும் கூடியது. அப்போது முதல்வர் பினராயி விஜயன் பேசியது: அமைச்சரவை அங்கீகரித்த உரையில் 12, 15, 16 ஆகிய பத்திகளில் கவர்னர் மாற்றங்களை ஏற்படுத்தி வாசித்தார். சட்டசபையின் மரபின்படி அமைச்சரவை அங்கீகரித்த உரையைத் தான் கவர்னர் வாசிக்க வேண்டும்.

வருடத்தின் முதல் கூட்டத்தொடர் கவர்னரின் உரையுடன் தான் தொடங்க வேண்டும். அரசின் கொள்கைகள் தான் உரையில் இடம்பெற்றிருக்கும். எனவே கவர்னர் நீக்கி வாசித்த 12, 15, 16 ஆகிய பத்திகள் மீண்டும் உரையில் இடம்பெறும். பல்வேறு துறைகளில் சாதனை படைத்த போதிலும் ஒன்றிய அரசின் தொடர்ச்சியான பாதகமான நடவடிக்கைகளின் காரணமாக கேரளா கடுமையான பொருளாதார நடவடிக்கைகளில் சிக்கித் தவித்து வருகிறது.

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு ஒப்புதல் கிடைக்காததால் அவை நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதற்கு எதிராக கேரள அரசு உச்சநீதிமன்றத்தை அணுகி உள்ளது. மேற்கூறிய இந்த வாசகங்களை கவர்னர் நீக்கி வாசித்தார். கவர்னர் நீக்கிய வாசகங்கள் அனைத்தும் உரையில் அப்படியே இடம்பெறும். இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

Related Stories: