மாமனார், மைத்துனரை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்ற அதிமுக நிர்வாகி: கோபி அருகே பரபரப்பு

கோபி: குடும்பத் தகராறில் மாமனார், மைத்துனரை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்ற அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம் கோபி அருகே ஆண்டவர்மலையை சேர்ந்தவர் கோபிநாத் (43). ஈரோடு மேற்கு மாவட்ட அதிமுக மாணவரணி இணைச்செயலாளர். விவசாயம் செய்து வருகிறார். இவருக்கும் பவானிசாகர் அடுத்த எரங்காட்டூரை சேர்ந்த விவசாயி வேலுச்சாமி மகள் பிருந்தாவுக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 10 வயதில் ஹாசினி என்ற மகள் உள்ளார். கோபிநாத் அடிக்கடி குடிபோதையில் மனைவி பிருந்தாவிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவும் போதையில் மனைவி பிருந்தாவிடம் தகராறு செய்து உள்ளார். இதனால் மனமுடைந்த பிருந்தா இது குறித்து தந்தை வேலுச்சாமி மற்றும் தம்பி தினேஷ்குமாரிடம் கூறி உள்ளார். உடனடியாக நள்ளிரவில் வேலுச்சாமியும், அவரது மகன் தினேஷ்குமாரும் காரில் மகள் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது போதையில் இருந்த கோபிநாத், அவர்களிடமும் தகராறு செய்து உள்ளார். அவர்கள் தட்டிக் கேட்ட போது ஆத்திரமடைந்த கோபிநாத் தனது உரிமம் பெற்ற இரட்டைகுழல் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வெளியே ஓடி வந்துள்ளார்.

முதலில் வானத்தை நோக்கி 3 முறை சுட்டுள்ளார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வேலுச்சாமியும், தினேஷ்குமாரும் பயத்தில் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு நம்பியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆத்திரமடைந்த கோபிநாத், தினேஷ்குமாரின் காரை அடித்து நொறுக்கினார். இதையடுத்து அங்கு வந்த நம்பியூர் போலீசார், கோபிநாத்தை கைது செய்து, அவர் வைத்து இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: