விழுப்புரம்: மகளை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, ஓய்வு பெற்ற எஸ்ஐ தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் இந்திராநகரை சேர்ந்தவர் கோதண்டராமன் (70). தமிழ்நாடு காவல்துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி செல்வி (60). இவர்களுக்கு கலையரசி (35), சுமலதா (33) ஆகிய இரண்டு மகள்கள் இருந்தனர். கலையரசி திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார். சுமலதா கோலியனூர் அருகே குருமங்கோட்டை கிராமத்தை சேர்ந்த மணிமாறன் என்பவருடன் திருமணமாகி வசித்து வந்தார். அவருக்கு நுரையீரல் தொற்று காரணமாக நீண்ட நாட்களாக மூச்சு விடமுடியாமல் அவதியடைந்து வந்ததாக தெரிகிறது. இதனால் கடந்த சில மாதங்களாக சுமலதா தனது 7 வயது மகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். புதுவை ஜிப்மர் உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் சுமலதாவுக்கு உடல்நிலை குணமாகவில்லை. இதனால் அவரது தந்தை கோதண்டராமன் மிகுந்த மனஉளைச்சலுக்குள்ளாகி இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் கோதண்டராமன் மனைவி செல்வியை, நடைபயிற்சிக்கு சென்று விட்டு வா, என்று கூறி அனுப்பி உள்ளார். பின்னர் மகள் சுமலதாவின் கழுத்தை கத்தியால் அறுத்து உள்ளார்.
வலி தாங்க முடியாமல் கதறியடி ரத்த வெள்ளத்தில் சாய்ந்த சுமலதா சிறிது நேரத்தில் உயிரிழந்தார். மகளை கொன்ற குற்ற உணர்ச்சியாலும், பயத்தாலும், கோதண்டராமன் தனது கை மற்றும் கழுத்தில் அதே கத்தியால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது சுமலதா தரையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். கோதண்டராமன் கையில் கத்தியுடன் ரத்த காயங்களுடன் நின்றிருந்தார். அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் வரவழைத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த கண்டமங்கலம் போலீசார் சுமலதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
