தங்களது நேர்மை மீது சந்தேகம் வந்துவிடும் என்பதால் கைதிகளுக்கு ஜாமீன் வழங்க நீதிபதிகள் பயப்படுகிறார்கள்: சுப்ரீம்கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி பேச்சு

 

ஜெய்ப்பூர்: வழக்கு விசாரணை தாமதமானால் கைதிகளுக்கு ஜாமீன் வழங்குவதே விதி என்று முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அதிரடியாக தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த கலவரம் மற்றும் சதித் திட்டம் தொடர்பாக உமர் காலித் என்பவர் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் அவர் மீதான விசாரணை முழுமையாக தொடங்கப்படவில்லை. வழக்கமாக இந்திய குற்றவியல் சட்டத்தில் ‘ஜாமீன் என்பதே விதி; சிறை என்பது விதிவிலக்கு’ என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது. ஆனால் கடுமையான தேசிய பாதுகாப்பு சட்டங்களின் கீழ் கைது செய்யப்படும் நபர்களுக்கு இந்த விதிமுறை தலைகீழாக மாற்றப்பட்டு, அவர்கள் ஜாமீன் கிடைக்காமல் நீண்ட காலம் சிறையில் வாடும் சூழல் தற்போது நிலவி வருகிறது.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இலக்கியத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசுகையில், ‘விரைவான விசாரணை என்பது அரசியல் சாசனம் வழங்கியுள்ள வாழ்வுரிமையின் அடிப்படை பகுதியாகும். நாடாளுமன்றம் சட்டங்களை இயற்றினாலும், அரசியல் சாசனமே மேலானது. ஒருவர் குற்றம் செய்ததாக நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதி என்பதே இந்திய சட்டத்தின் அடிப்படை. ஆனால் தற்போதுள்ள பாதுகாப்பு சட்டங்கள் இதனை மாற்றி குற்றம் சாட்டப்பட்டவரை குற்றவாளியாகவே கருதுகின்றன. பாலியல் பலாத்காரம் போன்ற குற்றங்களில் மீண்டும் ஈடுபட வாய்ப்பிருத்தல், நாட்டை விட்டு தப்பிச் செல்லுதல் அல்லது சாட்சியங்களை கலைத்தல் ஆகிய மூன்று சூழல்களில் மட்டுமே ஒருவருக்கு ஜாமீன் மறுக்கப்பட வேண்டும்.

மேலும் கீழமை நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் நேர்மை மீது உயர் அதிகாரிகளுக்கோ அல்லது மக்களுக்கோ சந்தேகம் எழும் என்ற பயம் காரணமாக அவர்கள் ஜாமீன் வழங்க தயங்குகிறார்கள். ஒரு வழக்கு விசாரணையை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க முடியாவிட்டால், சம்மந்தப்பட்ட நபரை நீண்ட காலம் சிறையில் வைப்பதே ஒரு தண்டனையாக மாறிவிடும். விசாரணை தாமதமானால் ஜாமீன் வழங்குவதே விதியாக இருக்க வேண்டும். 5 முதல் 7 ஆண்டுகள் சிறையில் இருந்த பிறகு ஒருவர் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டால், அவர் இழந்த காலத்தை அரசால் எப்படி ஈடு செய்ய முடியும்?’ என்று கேள்வி எழுப்பினார்.

Related Stories: