இந்தியாவில் காற்று மாசுபாட்டால் 10 லட்சம் பேர் பலி: எவ்வளவு காலம் தான் மோடி மறுப்பு தெரிவிப்பார்: காங்.விமர்சனம்

புதுடெல்லி: இந்தியாவில் காற்று மாசுபாட்டால் வருடத்திற்கு 10 லட்சம் பேர் பலியாகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஒன்றிய பாஜ அரசை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
கங்கை சமவெளிகள், இமய மலை அடிவார பகுதியில் கடும் மாசுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக ஆண்டுக்கு 10 லட்சம் அகால மரணங்கள் ஏற்படுகின்றன என உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை மேற்கோள் காட்டி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிட்டுள்ளதாவது: காற்று மாசுபாட்டால் கங்கை சமவெளிகள் மற்றும் இமயமலை அடிவாரத்தில் ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் அகால மரணங்கள் ஏற்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் பிராந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீத பொருளாதார இழப்பையும் ஏற்படுத்துகிறது. டெல்லி உள்ளிட்ட இடங்களில் காற்று தர குறியீடு(ஏக்யூஐ) மோசமடைந்து கடும் சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எந்தவிதமான தளர்வுகளோ அல்லது நீர்த்துப்போகச் செய்யும் செயல்களோ இல்லாமல் காற்று மாசுபாட்டு விதிமுறைகள் மற்றும் தரநிலைகளை கடுமையாகவும் அமல்படுத்த வேண்டும் என அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. காற்று மாசுபாடு பிரச்னையில் மோடி அரசு எவ்வளவு காலம் தான் மறுப்பு தெரிவிக்கும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: