நாக்பூர்: ‘விஷயங்கள் சீராக நடக்கத் தொடங்கும் போது, புதிய தலைமுறையினரிடம் பொறுப்புகளை கொடுத்து விட்டு, பழைய தலைமுறையினர் ஒதுங்கிக் கொள்ள வேண்டும்’ என ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி கூறி உள்ளார்.
மகாராஷ்டிராவின் விதர்பா பிராந்தியத்தில் தொழில் வளர்ச்சி, முதலீடுகள் மற்றும் வணிக வாய்ப்புகளை ஊக்குவிக்கும் ‘அட்வான்டேஜ் விதர்பா’ தொழில்துறை கண்காட்சி மற்றும் மாநாடு நாக்பூரில் நேற்று நடந்தது. தொழில்துறை மேம்பாட்டு சங்கத்தின் தலைவர் ஆஷிஷ் காலே ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘அட்வான்டேஜ் விதர்பா முயற்சியில் இளம் தலைமுறையினரை காலே ஈடுபடுத்தி உள்ளார். எந்த விஷயத்திலும் படிப்படியாக தலைமுறைகள் மாற வேண்டும் என நம்புகிறேன். விஷயங்கள் சீராக நடக்கத் தொடங்கும் போது, நாங்கள் படிப்படியாக ஓய்வு பெற்று, புதிய தலைமுறையிடம் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும். பழைய தலைமுறையினர் விலகிக் கொண்டு வேறு வேலைகளை செய்ய வேண்டும். விதர்பா பிராந்தியத்தில் பல்வேறு துறைகளில் மிகச்சிறந்த தொழில்முனைவோர் உள்ளனர்’’ என்றார்.
