நெல்லை: தென் மண்டலத்தில் கொலை, கொள்ளை மற்றும் வழிப்பறி வழக்குகளில் நீதிமன்றத்தால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டும் தலைமறைவாக உள்ளவர்களை பிடிக்க ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவின்பேரில் ‘ஆபரேஷன் டிராக்நெட்’ மூலம் 1,000க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து, தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி கூறுகையில், ‘‘தேடுதல் வேட்டையில், இதுவரை தலைமறைவாக இருந்த 610 குற்றவாளிகளைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வாரன்டுகளை நிறைவேற்றியுள்ளனர். அதேவேளையில், போலீஸ் நெருக்கடி காரணமாக 510 பேர் தாமாகவே முன்வந்து நீதிமன்றங்களில் சரணடைந்து வாரன்டுகளைத் திரும்பப் பெற்றுள்ளனர். கடந்த 9ம் தேதி முதல் 16ம் தேதி வரையிலான 5 நாட்களில் மட்டும் 1,000க்கும் மேற்பட்ட வாரன்டுகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 5 முதல் 10 ஆண்டுகளாக போலீஸ் கையில் சிக்காமல் தண்ணி காட்டி வந்த பழைய குற்றவாளிகள் பலர், இந்தத் திடீர் சோதனையில் வீடுகளிலும், மறைவிடங்களிலும் வைத்து பிடிக்கப்பட்டுள்ளனர்.’’ என்றார்.
