மேற்கு வங்கம்-அசாம் இடையே நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை தொடக்கம்: 4 அம்ரித் பாரத் ரயில் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

மால்டா: மேற்கு வங்கம்-அசாம் இடையே நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையையும், தமிழ்நாட்டின் திருச்சி, நாகர்கோவில் உட்பட 4 அம்ரித் பாரத் ரயில் சேவையையும் பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று சென்றார். மேற்கு வங்க மாநிலம் மால்டா டவுன் ரயில் நிலையத்திற்கு சென்ற அவர், அங்கு ஹவுரா-கவுகாத்தி (காமாக்யா) இடையே நாட்டின் முதல் வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். உயர்தர சொகுசு வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரயிலின் உட்புறங்களை பார்வையிட்ட பிரதமர் மோடி சிறுவர்கள், பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘விமான பயணத்திற்கு இணையான அனுபவத்தை தரக்கூடிய வகையில் அதை விட குறைவான கட்டணத்தில் வந்தே பாரத் ரயில் சேவை வழங்கப்படுகிறது. தற்போதைய ஸ்லீப்பர் வகை ரயில்கள் நீண்ட தூர பயணத்தை விரைவானதாகவும் பாதுகாப்பனதாகவும் வசதியானதாகவும் மாற்றும். ஹவுரா-கவுகாத்தி இடையேயான வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் மூலம் பயண நேரம் 2.5 மணி நேரம் குறையும். இந்த ரயில் சராசரியாக மணிக்கு 120 முதல் 130 கிமீ வேகத்தில் இயக்கப்படும். இந்த ரயிலில் பயணகளுக்கான சொகுசு வசதிகளுடன், கவாச் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன’ என கூறப்பட்டுள்ளது.

மொத்தம் 16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் 823 பயணிகள் பயணிக்க முடியும். மறுமுனையில் கவுகாத்தி-ஹவுரா இடையேயான வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையும், 4 அம்ரித் பாரத் ரயில் சேவையையும் காணொலி மூலமாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வந்தே பாரத் ரயில்கள் முழுக்க முழுக்க குளிர்சாதன வசதி கொண்டதாக இருக்கும் நிலையில், குளிர்சாதன வசதி இல்லாத பெட்டிகளாக வந்தே பாரத் அளவுக்கான வசதிகளுடன் குறைவான கட்டணத்துடன் இயக்கப்படுவை அம்ரித் பாரத் ரயில்கள்.

இத்தகைய 9 அம்ரித் பாரத் ரயில்கள் புதிதாக இயக்கப்பட உள்ளன. அவற்றில், நியூ ஜல்பைகுரி-நாகர்கோவில், நியூ ஜல்பைகுரி – திருச்சி, அலிபுர்தார்-எஸ்எம்விடி பெங்களூரு, அலிபுர்தார்-மும்பை இடையே 4 அம்ரித் பாரத் ரயில்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்துள்ளார். இதைத் தொடர்ந்து மால்டாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி அங்கு ரூ.3,250 கோடி மதிப்பிலான ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பல்வேறு பணிகளை நாட்டிற்கு அர்ப்பணித்தார். அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் இன்று நடக்கும் நிகழ்ச்சிகளில் கொல்கத்தா (சந்திகாச்சி)-தாம்பரம் உட்பட மேலும் 5 அம்ரித் பாரத் ரயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு 3 அம்ரித் பாரத் ரயில் சேவைகள் தொடங்கப்பட உள்ளன. தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 3 மாநிலங்களிலும் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

* அமெரிக்கா, ஐரோப்பாவை விட அதிக ரயில் தயாரிப்பு
மால்டாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், ‘‘இந்தத் திட்டங்கள், குறிப்பாக புதிய ரயில்கள், இப்பகுதி இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும். ஒரு காலத்தில், நாம் வெளிநாடுகளைப் பார்த்து, நம் நாட்டிலும் இதுபோன்ற நவீன ரயில்கள் வர வேண்டும் என்று கனவு கண்டோம். இன்று அந்தக் கனவு நனவாகியுள்ளது. புதிய வந்தே பாரத் படுக்கை வசதி ரயில், காளி அன்னையின் புனித பூமியை காமாக்யா அன்னையின் புனித பூமியுடன் இணைத்துள்ளது. இந்தியா தனது போக்குவரத்து வசதிகளை நவீனமயமாக்கியுள்ளதுடன், நாட்டைத் தன்னிறைவு பெற்றதாகவும் ஆக்கியுள்ளது.

ஐரோப்பா, அமெரிக்காவை விட இந்தியாவில் தற்போது அதிக ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவில் ரயில் பயணம் எவ்வாறு புரட்சிகரமாக மாற்றப்பட்டு வருகிறது என்பதை உலகிற்கு எடுத்துரைப்பதற்காக, வெளிநாட்டினர் இந்தியாவில் உள்ள மெட்ரோ மற்றும் பிற ரயில்களைப் பற்றிய காணொளிகளை எடுத்து வருவதை காண்கிறேன். நவீன வந்தே பாரத் படுக்கை வசதி ரயில்கள் எதிர்காலத்தில் நாடு முழுவதும் இயக்கப்படும். நாட்டை இணைப்பதே எங்கள் முதன்மை நோக்கம், தூரங்களைக் குறைப்பதே எங்கள் இலக்கு’’ என்றார்.

* மேற்கு வங்கத்திற்கு ஊடுருவலே பெரிய சவால்
மால்டா பொதுக் கூட்டத்தில் ஆளும் மம்தா பானர்ஜி அரசை தாக்கி பிரதமர் மோடி பேசுகையில், ‘‘ஊடுருவல் மேற்கு வங்கத்திற்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. வளர்ந்த மற்றும் வளமான நாடுகள் கூட சட்டவிரோத குடியேறிகளைக் கண்டறிந்து வெளியேற்ற உறுதியான நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதுபோல மேற்கு வங்கத்திலும் ஊடுருவல்காரர்களை வெளியேற்ற வேண்டியது அவசியம். ஊடுருவல் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் மக்கள்தொகை சமநிலை மாறிவிட்டது. பல இடங்களில் பேசப்படும் மொழிகூட மாறத் தொடங்கியுள்ளதாக மக்கள் என்னிடம் கூறுகிறார்கள். ஊடுருவல்காரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், மால்டா மற்றும் முர்ஷிதாபாத் உட்பட மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் கலவரங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன.

ஆளும் திரிணாமு காங்கிஸ் சிண்டிகேட் அமைத்து ஊடுருவல்காரர்கள் இங்கு குடியேறுவதை உறுதி செய்கின்றனர். ஊருவல்காரர்களுக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையே கூட்டணியே இருக்கிறது. இந்தக் கூட்டணியை நீங்கள் உடைக்க வேண்டும். பாஜ அரசாங்கம் அமைந்தவுடன், ஊடுருவல் மற்றும் ஊடுருவல்காரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். அதே சமயம், மதத் துன்புறுத்தல் காரணமாக இந்தியாவில் தஞ்சம் புகுந்த மாதுவாக்கள் போன்ற அகதிகள் எந்த கவலையும் பட வேண்டாம். அவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது’’ என்றார்.

Related Stories: