நிலக்கரி கடத்தல் ஊழல் விவகாரம்: மம்தாவிடம் ரூ.100 கோடி கேட்டு அவதூறு வழக்கு: பாஜக மூத்த தலைவர் மனு

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி நூறு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். மேற்கு வங்கத்தில் ஐ-பேக் நிறுவனம் தொடர்பான அமலாக்கத்துறை சோதனையைக் கண்டித்து முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த 8 மற்றும் 9ம் தேதிகளில் போராட்டம் நடத்தினார். அப்போது, நிலக்கரி கடத்தல் ஊழலில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி ஆகியோருக்குத் தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் வழியாகப் பணம் கைமாறியதாகவும் மம்தா பானர்ஜி பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டிற்கு 72 மணி நேரத்திற்குள் தகுந்த ஆதாரங்களுடன் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரி சுவேந்து அதிகாரி கடந்த 10ம் தேதி மம்தா பானர்ஜிக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். ஆனால், அந்த நோட்டீஸிற்கு முதல்வர் தரப்பிலிருந்து எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை. இந்நிலையில், நோட்டீஸிற்குப் பதில் வராததால் சுவேந்து அதிகாரி நேற்று அலிப்பூர் நீதிமன்றத்தில் மம்தா பானர்ஜிக்கு எதிராக அவதூறு வழக்கை அதிகாரப்பூர்வமாகத் தாக்கல் செய்தார். அதில் தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததற்காக 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், ‘என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் கற்பனையானவை மற்றும் மோசமானவை. தற்போதைய விசாரணையைத் திசைதிருப்பவே முதல்வர் இவ்வாறு பேசுகிறார். இந்த வழக்கில் கிடைக்கும் நஷ்ட ஈட்டுத் தொகையைத் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக அளிப்பேன்’ என்று தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே ஏற்பட்ட இந்த மோதல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: