எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கும் நிலையில் 100 நாள் வேலை திட்டம் ‘ஊழலின் கடல்’: ஒன்றிய அமைச்சர் சர்ச்சை கருத்து

அகமதாபாத்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மிகப்பெரிய ஊழல் கடலாக மாறிவிட்டதாகவும், அதனால் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய விவசாயத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம், அகமதாபாத் வந்திருந்த ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், செய்தியாளர்களிடம் பேசுகையில் பழைய வேலை உறுதித் திட்டத்தைக் கடுமையாகச் சாடினார். அவர் கூறுகையில், ‘100 நாள் வேலை திட்டம் என்பது கொள்ளையடிப்பதற்கான ஒரு உத்தரவாதமாக மாறிவிட்டது.

மனிதர்களுக்குப் பதிலாக இயந்திரங்களை வைத்தும், ஒப்பந்ததாரர்கள் மூலமாகவும் பணிகள் நடைபெற்றுள்ளன. கிராமசபை தணிக்கையில் மட்டும், இறந்தவர்கள் மற்றும் முதியோர்களின் பெயர்களைப் பயன்படுத்தி முறைகேடு செய்ததாக 10 லட்சத்து 51 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன. அரசின் நிதியை வீணடித்தது மட்டுமின்றி, தொழிலாளர்களுக்குச் சம்பளம் கிடைப்பதிலும் தாமதம் ஏற்பட்டது. அதனால் பழைய சட்டத்தை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த சட்டத்திற்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்டுள்ள ‘விக்சித் பாரத்’ சட்டத்தின் கீழ், வேலை நாட்கள் 100-லிருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

வேலை வழங்கப்படாவிட்டால் வேலையில்லா திண்டாட்ட உதவித்தொகை மற்றும் சம்பளத் தாமதத்திற்கு இழப்பீடு வழங்கும் பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. செயற்கைக்கோள் வரைபடம் மூலம் பணிகள் கண்காணிக்கப்படும். இமயமலை மற்றும் வடகிழக்கு மாநிலங்களைத் தவிர்த்துப் பிற மாநிலங்களில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் 60:40 என்ற விகிதத்தில் நிதியைப் பகிர்ந்து கொள்ளும்’ என்றார். 100 நாள் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியுள்ளதாகக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மிகப்பெரிய ஊழல் கடலாக மாறிவிட்டதாக அமைச்சர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: