திண்டுக்கல், ஜன.10: திண்டுக்கல்லில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திண்டுக்கல் யூனியன் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார்.
மாவட்ட நிர்வாகிகள் நாராயணசாமி, பாலகிருஷ்ணன், பெரியசாமி, சாலாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநில பொதுச் செயலாளர் மாயமலை வாழ்த்துரை வழங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியுடன் சிறப்பு பென்ஷன் ரூ.6,750 வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு தேசிய மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். ஈமச்சடங்கு நிதி ரூ.25,000 வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாநிலத் துணைத் தலைவர் சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
