பேராவூரணி, மார்ச் 12: பட்டுக்கோட்டையில் கடந்த ஆண்டு கோட்டாட்சியராக பணியாற்றிய ஜெயயின் முயற்சியால் நரிக்குறவர்களின் வீடு கட்டும் நூற்றாண்டு கனவு நிஜமாகியது. அதிராம்பட்டினம் அருகே ராஜாமடம், கிழக்குக் கடற்கரை சாலையில் வசதிகள் நிறைந்த பகுதியில் பழங்குடியின நரிக்குறவர் சமூக மக்களின் வசிப்பிடத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு 40 குடும்பங்களுக்கு தலா 2 சென்ட் நிலத்திற்கு பட்டா வழங்கப்பட்டது. வள்ளலார்புரம் என்ற புதிய குடியிருப்பு பகுதி உதயமானது. நிலம் மட்டும் வழங்கிவிட்டால் இன்றைய நிலையில் எத்தனை காலமானாலும் இவர்களால் வீடு கட்டுவதற்கான பொருளாதார வசதியை எட்டமுடியாது என்பதை உணர்ந்த எம்எல்ஏ அசோக்குமார் உள்ளிட்ட சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று தஞ்சை கலெக்டர் பிரியங்கா பங்கஜம், சிறப்பு திட்டத்தின் கீழ் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டி வழங்க உத்தரவிட்டார்.
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் தொகையோடு தன் நிதியையும் சேர்த்து கட்டப்பட்டு வரும் வீடுகளை பூர்த்தி செய்ய நரிக்குறவர்களுக்கு வசதியும் இல்லை, வேறு வழியும் தெரியவில்லை. அதனால் கட்டப்பட்ட வீடுகள் முழுமை பெறாமல் பாதியில் நிற்கிறது. குடிசைகள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கிட உறுதியேற்று, ஆட்சி செய்யும் முதலமைச்சர் நலிந்த மக்களுக்காக தொடங்கிய கட்டுமான பணிகள் நிறைவு பெற கூடுதல் நிதியை வழங்க ஆணையிட்டு
பழங்குடியின மக்களின் பல்லாண்டு கால கனவை நிறைவேற்ற வேண்டும் எனவும், நரிக்குறவர் சமூக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான “பழங்குடியினர் சாதிச் சான்றிதழ்” வழங்க உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர் மெய்ச்சுடர் வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
