வெறிநாய் கடியுடன் தேர்வெழுதிய 10ம் வகுப்பு மாணவிகள் 14 பேர் மருத்துவமனையில் அனுமதி

பட்டுக்கோட்டை, மார்ச் 12: பட்டுக்கோட்டை பெரியதெரு பகுதியில் வெறிநாய் ஒன்று நேற்று சுற்றித்திரிந்தது. அப்போது அப்பகுதியில் நடந்து சென்ற 2 பேரை அந்த வெறி நாய் கடித்து குதறியது. அக்கம்பக்கத்தினர் விரட்டி அவர்களை மீட்டுள்ளனர். ஆனால் அதற்குள் அந்த சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 10க்கும் மேற்பட்டோரை அந்த நாய் கடித்து குதறியது. பொதுமக்கள் ஒன்று சேர்ந்து விரட்டவே, பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் வளாகத்திற்குள் வெறிநாய் ஓடியுள்ளது. நேற்று 10ம் வகுப்பு தேர்வு தொடங்கியதால், தேர்வு நேரத்திற்கு முன்பாக பள்ளி வளாகத்திற்கு வந்து தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவிகள் வெறிநாயை ஆக்ரோஷத்துடன் பள்ளிக்குள் புகுந்து ஓடிவருவதை கண்டு அலறி அடித்து ஓடி உள்ளனர். அப்போது அந்த வெறி நாய் தேர்வு எழுத செல்வதற்காக தயாராக வந்திருந்த மாணவி ஒருவரையும், தடுக்கச் சென்ற அவரது தாயையும் கடித்து குதறியது. அதனை தொடர்ந்து அருகிலிருந்த 5 மாணவிகளை வரிசையாக கடித்து குதறியது. இதனால் பள்ளி வளாகமே களேபரமானது.

வெறிநாய் கடித்ததால் காயமடைந்த மாணவிகளை, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என அனைவரும் சேர்ந்த பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்‌. மருத்துவமனையில் வெறிநாய் கடித்து குதறிய 6 மாணவிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மீண்டும் தேர்வு எழுதுவதற்காக, மாணவிகள் பள்ளிக்கு விரைவாக அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில் அந்த வெறி நாய் கடித்து படுகாயமடைந்த 14க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெறிநாயின் அட்டகாசம் குறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் கனிராஜ், சம்மந்தப்பட்ட அந்த வெறி நாயை உடனடியாக பிடிப்பதற்கு நகராட்சி சுகாதார ஆய்வாளர் அறிவழகனுக்கு உத்தரவிட்டார்.

அங்கு சென்ற ஆய்வாளர், நாய் பிடிக்கும் பணியாளர்கள் உதவியுடன் அந்த வெறி நாயை வலையை போட்டு லாவகமாக பிடித்தனர். இந்நிலையில் வெறி நாய் கடித்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பொதுமக்களை பட்டுக்கோட்டை எம்‌.எல்.ஏ அண்ணாதுரை, நகராட்சித் தலைவர் சண்முகப்பிரியா செந்தில்குமார், நகர திமுக செயலாளர் செந்தில்குமார், வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பார்த்திபன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் ஏனாதி பாலசுப்ரமணியன், சேகர், நகராட்சி ஆணையர் கனிராஜ் உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் படுகாயமடைந்த மாணவிகளின் பெற்றோர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இதனிடையே தேர்வு எழுதி வரும் மாணவிகளின் நலன் கருதி பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலேயே அரசு ஆம்புலன்ஸ் மற்றும் நடமாடும் மருத்துவமனையும், டாக்டர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரவழைக்கப்பட்டனர்.

பயமாக இருக்கிறது; வெறிநாய் துரத்தி துரத்தி கடித்தது குறித்து மாணவி ஒருவரின் தாயார் அதிராம்பட்டினம் பூமாரி மற்றும் பெற்றோர்கள் கூறுகையில், மாணவிகளுக்கு உடனடியாக அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்டு தற்போது தேர்வு எழுதி வருகிறார்கள். எங்களுக்கு பயமாக இருக்கிறது. வீட்டிற்கு போகவே மனதில்லை. அதனால் நாங்களும் தேர்வு முடியும் வரை இங்கேயே இருந்து எங்களது குழந்தைகளை வீட்டிற்கு பத்திரமாக அழைத்துச் செல்வதற்காக நின்று கொண்டிருக்கிறோம். இதுபோன்று சாலைகளில் சுற்றித் திரியும் வெறி நாய்களை பிடிப்பதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மிகவும் வேதனையுடன் தெரிவித்தனர்.

Related Stories: