திருத்துறைப்பூண்டி, ஜன. 10: திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் புதிய சுகாதார துணை மையங்கள் திறக்கப்பட்டடன. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு மற்றும் நெடும்பலம் ஊராட்சிகளில் தலா ரூ.4,44,500 மதிப்பீட்டில் பதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார மையங்களின் திறப்பு விழா நடைபெற்றது, மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்.
விழாவில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சங்கீதா, தாசில்தார் பரமேஸ்வரி, ஆலத்தம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் பாலதண்டாயுதபாணி, அந்தோணி அருள்தாஸ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சத்தியமூர்த்தி, முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுஜாதா, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் இந்திரா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மாலினி ரவிச்சந்திரன், பழனி மற்றும் செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
