சென்னை: தமிழ்நாடு அரசு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் வாயிலாக காலநிலை மாற்றச் சவால்களை எதிர்கொள்ள பல்வேறு தடுப்பு மற்றும் தகவமைப்பு நடவடிக்களை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, தமிழ்நாடு போன்ற நீண்ட நெடிய கடற்கரையினைக் கொண்ட மாநிலத்தில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் வழக்கமாகி வருகின்ற சூழலில், இச்சவால்களை எதிர்கொள்ளத் தேவையான விழிப்புணர்வு மற்றும் கல்வியறிவினை அனைவருக்கும் ஏற்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தினை உணர்ந்து.
கடந்த 2025-26 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் போது காலநிலைக் கல்வியறிவினை நம் மாநிலத்தின் கல்வி அமைப்பின் அனைத்து மட்டங்களிலும் ஒருங்கினைத்து எடுத்துச்செல்ல காலநிலைக் கல்வியறிவு முன்னெடுப்பு (Climate Education Initiative) குறித்த அறிவிப்பு நிதி, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்களால் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இம்முன்னெடுப்பின் கீழ் மாணவர்களுக்கு கோடைகால மற்றும் குளிர்கால இயற்கை முகாம்கள், காலநிலை மாற்றம் குறித்து பள்ளி ஆசிரியர்களுக்கான உறைவிடப் பயிற்சி முகாம்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு சூழல் அறிவோம் எனும் தலைப்பிலான விநாடி வினா ஆகியவை பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையால் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், மாநிலந்தழுவிய “சூழல் 2.0” விநாடி வினா போட்டி கடந்த 23.10.2025 அன்று தொடங்கப்பட்டது. இணைய வழியில் நடத்தப்பட்ட இந்த விநாடி வினா நிகழ்ச்சியின் முதற்கட்ட போட்டிகளில் அணிகளுக்கு இருவர் என சுமார் 17,000 அணிகள் என 34,000 மாணவர்கள் பங்கு பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும், அனைத்து மாவட்டங்களிலும் முதற்கட்ட போட்டியில் வெற்றி பெற்ற 10 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, சென்னை, சேலம், மதுரை, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை திருச்சி ஆகிய மண்டலங்களில் மண்டல அளவிலான போட்டி கடந்த நவம்பர் மாதம் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இணைய வழியில் நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இன்று, சென்னை பிர்லா கோளரங்கத்தில் உள்ள அறிவியல் நகர அரங்கில் நடைபெற்ற “சூழல் 2.0” விநாடி வினாவின் இறுதிப்போட்டியில் மேற்கூரிய மண்டலங்களில் வெற்றி பெற்ற அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாண்ட்ஃபோர்ட் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி, சென்னையைச் சேர்ந்த கலைமகள் வித்யாஷ்ரம் பள்ளி, கோயம்புத்தூர் மாவட்டம் கோமங்களம்புதூரைச் சேர்ந்த வித்யா நேத்ரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமூடியைச் சேர்ந்த ஸ்டெல்லா மேரீஸ் சிபிஎஸ்ஈ பள்ளி, திருவண்ணாமலை மாவட்டம் பெரனமல்லூர் ஒன்றியம் செம்மாம்பாடியைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மதுரையைச் சேர்ந்த மங்கையர்க்கரசி மேல்நிலைப்பள்ளி மற்றும் நாமக்கல் மாவட்டம் அனியபுரத்தைச் சேர்ந்த லிட்டில் ஏஞ்சல்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளிட்ட ஏழு அணிகள் பங்கேற்றனர்.
இதில், நாமக்கல் மாவட்டம் அனியபுரத்தைச் சேர்ந்த லிட்டில் ஏஞ்சல்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி, கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமூடியைச் சேர்ந்த ஸ்டெல்லா மேரீஸ் சிபிஎஸ்ஈ பள்ளி, சென்னையைச் சேர்ந்த கலைமகள் வித்யாஷ்ரம் பள்ளி ஆகிய பள்ளிகள் முறையே முதல், இரண்டு மற்றும் மூன்றாமிடத்தைப் பெற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சுப்ரியா சாஹூ, இ.ஆ.ப., பரிசுகளை வழங்கினார். இப்போட்டியில் முதல் பரிசாக ரூ. 50,000. இரண்டாம் பரிசாக, ரூ. 30000, மூன்றாம் பரிசாக, ரூ. 20000 மற்றும் ஆறுதல் பரிசாக ரூ. 10000-மும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின்போது, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான சிறப்புச் செயலாளர் அனுராக் மிஸ்ரா, இ.வ.ப., சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இயக்குநர், ஆ.ர. ராகுல் நாத், இ.ஆ.ப., தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் உதவித் திட்ட இயக்குநர், கிரிஷ் பால்வே. இ.வ.ப., துணை இயக்குநர் (சுற்றுச்சூழல்), பள்ளிக்கல்வித்துறை காமாட்சி, சுற்றுச்சூழல் துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள். பல்வேறு அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
