திருத்தணி: அகூர் – தெக்களூர் இடையே சாலை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருவதால் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். திருத்தணி ஒன்றியம் அகூர்-தெக்களூர் இடையே 2.50 கிமீ தூரம் கொண்ட ஒன்றிய சாலை உள்ளது. இந்த சாலையை அகூர், அகூர் காலனி, கோரமங்கலம், நத்தம், தெக்களூர், பொம்மராஜிபுரம், இஸ்லாம்நகர், சூர்யநகரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் மழை காலங்களில் தெக்களூர் பகுதியில் நந்தி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது திருத்தணி-பொதட்டூர்பேட்டை மாநில நெடுஞ்சாலை போக்குவரத்து தடை செய்யப்படும். அப்போது, வாகன ஓட்டிகள் அகூர் சாலையை பயன்படுத்துவார்கள்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட அகூர்-தெக்களூர் தார் சாலை பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறியதால், சாலையில் சென்று வர முடியாத நிலையில் விவசாயிகள், கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.99 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த மாதம் 2.50 கிமீ தூரத்திற்கு சாலை புதுப்பிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஒன்றிய பொறியாளர், பணி மேற்பார்வையாளர்கள் முன்னிலையில் சாலை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 4 மாதங்களில் சாலை பணி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். நீண்டகால கோரிக்கைக்கு பின் சாலை புதுப்பிக்கும் பணி நடந்து வருவதால் கிராம மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
