3 சிறுவர்கள் திடீர் மாயம் குளத்தில் தேடும் பணி தீவிரம்

வேப்பூர், ஜன. 26: வேப்பூர் அடுத்த இளங்கியனூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ராமு-மணிமேகலை தம்பதி. இவர்களது மகன்கள் விக்னேஷ் (3), சர்வேஷ் (3), இரட்டையர்கள். இவர்கள் 2 பேரும் நேற்று திருபெயரில் உள்ள மணிமேகலையின் சகோதரி மல்லிகா வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு இந்த 2 சிறுவர்களும், மல்லிகாவின் மகன் விவேகனுடன் (3) சேர்ந்து வீட்டின் வெளியே விளையாட சென்றுள்ளனர். பின்னர் 3 சிறுவர்களும் திடீரென காணாமல் போயினர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவர்களின் பெற்றோர் பிள்ளைகளை அனைத்து இடங்களிலும் தேடிப்பார்த்தும், அவர்கள் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிறுவர்களின் பெற்றோர் வேப்பூர் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் வேப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கண்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுவர்கள் குடியிருக்கும் பகுதி அருகே உள்ள குளத்தில் சிறுவர்கள் ஏதேனும் விழுந்தார்களா? என்ற எண்ணத்தில் குளத்தில் இறங்கி தீவிரமாக தேடிவருகின்றனர்.

Related Stories:

>