மறைமலைநகர் அருகே 5 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்: விவசாயிகள் வேதனை

செங்கல்பட்டு, மே 11: மறைமலைநகர் அருகே 5 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானதை கண்ட விவசாயிகள் வேதனை அடைந்தனர். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அடுத்த கருநீலம் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, கொண்ட மங்கலம், கலிவந்தபட்டு, அனுமந்தபுரம், சென்னேரி, அனுமந்தை, ரெட்டிகுப்பம், அஞ்சூர், தென்மேல்பாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைந்த நெல் மூட்டைகளை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் மூலமாக விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி, கருநீலம் ஊராட்சியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஏராளமான விவசாயிகள் நெல் மூட்டைகளை கொண்டு வந்து இறக்கி வைத்தனர்.

இந்நிலையில், நேற்று திடீரென்று கோடை மழை பெய்தது. இதனை சற்றும் எதிர்பார்த்திராத விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால், கோடை மழையானது அரைமணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்ததால் சுமார் 5 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானது. இதனைக் கண்ட விவசாயிகள் வேதனை அடைந்தனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கோடை மழையால் நெல் மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்து சேதமாகிவிட்டதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்திற்கு வரும் நெல் மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்திருந்தால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து விணாவது தடுத்திருக்கலாம். இனி வரும் காலங்களில் நெல் மூட்டைகளை பாதுகாக்க அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும். விவசாயிகளுக்கு தார்பாய் வழங்க வேண்டும். குறிப்பாக, நெல் கொள்முதல் நிலையத்திற்கு வரும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்து வாணிப கிடங்குகளுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

The post மறைமலைநகர் அருகே 5 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்: விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.

Related Stories: