மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூன்றாக பிரிப்பு தமிழக அரசு உத்தரவு மின்வாரிய மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ்

வேலூர், மே 11: தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் எனப்படும் டான்ஜெட்கோ நிர்வாக ரீதியாக 3 ஆக பிரிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே தமிழ்நாடு மின்வாரியம் டான்ஜெட்கோ, டான்டிரான்ஸ்கோ, டிஎன்இபி என மூன்றாக பிரிக்கப்பட்டது. ஆனாலும், அதன் கணக்கு வழக்குகள், பொறுப்புகள், சொத்துக்கள் ஏதும் பிரிக்கப்படாமல் டான்ஜெட்கோ என்ற ரீதியிலேயே இயங்கி வந்தது. இந்த நிலையில் ஒன்றிணைந்த டான்ஜெட்கோ முழுமையாக தமிழ்நாடு பவர் ஜெனரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (டிஎன்பிஜிசிஎல்) என்ற தமிழ்நாடு மின்னுற்பத்தி கழகமாகவும், தமிழ்நாடு கிரீன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் (டிஎன்ஜிஇசிஎல்) என்ற தமிழ்நாடு பசுமை ஆற்றல் கழகமாகவும் பிரிக்கப்படுகிறது.

இதில் தமிழ்நாடு மின்னுற்பத்தி கழகமான டிஎன்பிஜிசிஎல் எனப்படும் தமிழ்நாடு பவர் ஜெனரேஷன் கார்ப்பரேஷன் நிலக்கரி, எரிவாயு, நாப்தா, லிக்னைட், டீசல், அணு அல்லது வேறு ஏதேனும் ஒத்த எரிபொருட்களை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்வதை மேற்கொள்ளும். அதேபோல், தமிழ்நாடு பசுமை ஆற்றல் கழகமான (டிஎன்ஜிஇசிஎல்) எனப்படும் தமிழ்நாடு கிரீன் எனர்ஜி கார்ப்பரேஷன், காற்று, கடல் காற்று, சூரிய ஒளி, உயிரி, உயிரி எரிபொருள், இணை உற்பத்தி, உள்ளாட்சி அமைப்புகளின் திடக்கழிவுகள், புவிவெப்பம், அலை, கடல் அலைகள், அனைத்து நீர் உட்பட புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்வதை மேற்கொள்ளும்.

டான்ஜெட்கோ பிரிக்கப்பட்ட நிலையில் அவற்றுக்கான சொத்துக்கள், பொறுப்புகள், ஒப்பந்தங்கள், பத்திரங்கள், அலுவலக தளவாடங்கள், அலுவலக பணியாளர்கள் என அனைத்தையும் பிரிக்கப்பட்டுள்ள இரண்டு நிறுவனங்களுக்கும் சமமாக பங்கிடப்படுகிறது. இதற்கான வழிகாட்டுதல்களையும் அரசு வழங்கியுள்ளது. இவ்வாறு பிரிக்கப்படும் டான்ஜெட்கோவிடம் ஒப்பந்தம் செய்துள்ள ஒப்பந்ததாரர்கள், சப்ளையர்கள், விற்பனையாளர்கள், மின்நுகர்வோர்கள் அனைவருக்கும் முறையான தகவல் தெரிவிக்கவும் அரசு வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. நிர்வாக ரீதியாக டான்ஜெட்கோ பிரிக்கப்படும் நிலையில் மின்வினியோகத்திலும், மின்உற்பத்தியிலும் எவ்வித இடர்பாடும் இருக்கக்கூடாது என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் மின்வாரியத்தில் தற்போது பணியில் உள்ள நிர்வாக ரீதியிலான அலுவலர்கள், பணியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் ஆகியோரிடம் விருப்பம் கேட்கும் பணியில் டான்ஜெட்கோ நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக டான்ஜெட்கோ அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூன்றாக பிரிப்பு தமிழக அரசு உத்தரவு மின்வாரிய மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் appeared first on Dinakaran.

Related Stories: