மூடிக் கிடந்த வீட்டுக்குள் இறந்து கிடந்த மூதாட்டியின் சடலம் மீட்பு உதவிக்கு யாருமின்றி சமையல் அறையில் சரிந்து கிடந்தார் திருவண்ணாமலையில் 2 நாட்களாக

திருவண்ணாமலை, மே 11: திருவண்ணாமலையில் வீட்டுக்குள் 2 நாட்களாக இறந்து கிடந்த மூதாட்டியின் சடலத்தை போலீசார் மீட்டனர். திருவண்ணாமலை வேங்கிக்கால் பொன்னுசாமி நகர் லிங்கபைரவர் தெருவை சேர்ந்தவர் பழனி மனைவி சித்ரா(64). கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் இவரது கணவர் இறந்து விட்டார். இவரது மகன் குமார் கணேஷ், திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு, திருமணம் ஆகி குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார். எனவே, இவரது தாய் சித்ரா மட்டும் லிங்க பைரவர் தெருவில் தனியே வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக சித்ரா வீட்டை விட்டு வெளியே வரவில்லை. வீட்டின் உட்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. வீட்டுக்குள் மின் விளக்குள் மட்டும் எரிந்து கொண்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் எதிர் வீட்டில் வசிப்பவர்கள், உடனடியாக சித்ராவின் மகன் குமார் கணேசுக்கு தகவல் அளித்தனர். அதைத் தொடர்ந்து நேற்று காலை அவர் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டினார்.

செல்போனிலும் தொடர்பு கொண்டார். ஆனாலும், வீட்டுக்குள்ள இருந்து எந்த பதிலும் வரவில்லை. எனவே, உடனடியாக திருவண்ணாமலை கிழக்கு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வீட்டின் வெளிச்சத்துக்காக அமைக்கப்பட்டிருந்த ஓடிஎஸ்ஐ உடைத்து வீட்டுக்குள் நுழைந்தனர். அப்போது, சமையல் அறையில் மூதாட்டி சித்ரா விழுந்து இறந்து கிடந்தது தெரியவந்தது. மேலும், ஸ்டவ் எரிந்த நிலையில் இருந்தது. டீ போடுவதற்காக ஸ்டவ் பற்ற வைத்த நிலையில், திடீரென மயங்கி கீழே விழுந்து உதவிக்கு யாரும் இல்லாததால் அதே இடத்தில் மூதாட்டி சித்ரா இறந்திருக்கலாம் என தெரியவந்தது. இரண்டு நாட்களாக ஸ்டவ் எரிந்து கொண்டிருந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக தீ விபத்து ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மூடிக் கிடந்த வீட்டுக்குள் இறந்து கிடந்த மூதாட்டியின் சடலம் மீட்பு உதவிக்கு யாருமின்றி சமையல் அறையில் சரிந்து கிடந்தார் திருவண்ணாமலையில் 2 நாட்களாக appeared first on Dinakaran.

Related Stories: