சென்னை: சென்னை திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை கிழக்கு கடற்கரை சாலையில் 4 வழி மேம்பாலம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை 6 வழி சாலையாக மாற்றம் ஆகியவற்றுக்கான டெண்டருக்கு தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் தங்களது நிறுவனத்தின் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளதாக கூறி போபாலை சேர்ந்த திலீப் பில்ட்கான் என்ற நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், எங்கள் நிறுவனம் பல்வேறு சாலை பணிகளை வெற்றிகரமாக அமைத்துள்ளது. இந்த நிலையில், ஏற்கனவே கேரளாவில் தேசிய நெடுஞ்சாலை-66ல் பணிகளை சரியாக செய்யாததால் தேசிய நெடுஞ்சாலை துறையால் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ள ஒரு நிறுவனத்திற்கு டெண்டர் தரப்பட்டுள்ளது. இது விதிகளுக்கு முரணானது என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, வரும் 27ம் தேதிவரை டெண்டருக்கு இடைக்கால தடை விதித்தும் அரசு தரப்பு பதில் தருமாறும் உத்தரவிட்டார்.
கிழக்கு கடற்கரை சாலையில் அமையவுள்ள 4 வழி மேம்பால டெண்டருக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை
- உயர் நீதிமன்றம்
- கிழக்கு கடற்கரை சாலை
- சென்னை
- இந்திய தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம்
- TNSHAI
- திருவான்மியூர்
- உத்தந்தி
