திருவொற்றியூர்: திருவொற்றியூர் அன்னை சிவகாமி நகரில் ரூ.4.62 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட படகு குழாமை மாநகராட்சி மேயர் பிரியா பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். திருவொற்றியூர் மண்டலம், 3வது வார்டு, அன்னை சிவகாமி நகரில் சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.4.62 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட திருவொற்றியூர் படகுக் குழாமை மேயர் பிரியா நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். பின்னர் மேயர் பிரியா செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதலமைச்சரின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரால் மணலி மற்றும் மாதவரம் ஏரிகளில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் அமைக்கப்பட்ட படகு குழாம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனை ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல, தற்போது திருவொற்றியூர் மண்டலத்திலும், புதிய படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை இப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரிதும் வரவேற்கின்றனர். முதல்வர், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். திருவொற்றியூர் அன்னை சிவகாமி நகரில் 20.17 ஏக்கர் பரப்பளவில் புதிதாக அமைக்கப்பட்ட ஏரியில் ரூ.4.62 கோடி மதிப்பீட்டில் படகுக் குழாம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் அழகிய நுழைவாயில்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான நுழைவாயில், காத்திருப்பு அறை, உணவகங்கள், டிக்கெட் வழங்கும் பகுதி, ஆண், பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறைகள், முதலுதவி அறை, மீட்பு நடவடிக்கை வசதிகள், குடிநீர் வசதிகள், படகு சவாரிக்கான பல்வகை படகுகள், மின்விளக்கு வசதிகள், கம்பி அமைப்புடன் கூடிய சுற்றுச்சுவர் உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த படகு குழாமில் 8 இருக்கை விசைப் படகு, 4 இருக்கை மிதிப்படகு, 2 இருக்கை மிதிப்படகு, 1 வாட்டர் ஸ்கூட்டர், 1 இருக்கை கயாக், 2 இருக்கை கயாக், 3 அக்வா ஜோர்பிங், 2 அக்வா ரோலர் ஆகிய வசதிகளுடன் குறைந்த கட்டணத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். நிகழ்வில், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, மண்டலக் குழு தலைவர் தி.மு.தனியரசு, மண்டல அலுவலர் பத்மநாபன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொது மேலாளர் லட்சுமி பிரியா, தலைமை மேலாளர் வெங்கடேஷ், மாமன்ற உறுப்பினர் தமிழரசன் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
