போர் பதற்றம் காரணமாக சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை: அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையே நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக, அங்குள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி நாளை (மார்ச் 2) நடைபெறவிருந்த 10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளை ஒன்றிய கல்வி வாரியம் ஒத்திவைத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஓமன், கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் உள்ள தேர்வு மையங்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வளைகுடா நாடுகளில் வசிக்கும் சுமார் 1.8 கோடி இந்தியர்களில், பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் கல்வி பயின்று வருகின்றனர். உயர்கல்விக்குத் தேவையான இந்த முக்கியமான தேர்வுகள் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், துபாய் முதல் தோஹா வரை உள்ள இந்திய மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பெரும் கவலையில் உள்ளனர். பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாலும், வான் எல்லைகள் மூடப்பட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாலும் மாணவர்கள் தேர்வு மையங்களுக்குச் செல்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள சூழலில், மாணவர்களுக்கான புதிய தேர்வு தேதிகள் சிபிஎஸ்இயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், பள்ளிகள் மூலம் வழங்கப்படும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டும் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்காலிகமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வழிகாட்டுதல்களை வழங்கப் பள்ளிகள் திட்டமிட்டுள்ளன.

Related Stories: