சென்னை: 73வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு குடியரசு தலைவர், பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள், தேசிய, மாநில தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 73வது பிறந்தநாளையொட்டி நேற்று கொண்டாடினார். அவருக்கு நேரிலும், தொலைபேசி வாயிலாகவும், சமூகவலைதளங்கள் வாயிலாகவும், கடிதம் மூலமாகவும் பிறந்தநாள் வாழ்த்துகளை முக்கிய பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கடிதம் மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததோடு, தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாகவும், எக்ஸ் வலைதளம் வாயிலாகவும் முதல்வருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சிவராஜ் சிங் சவுகான், கிரண் ரிஜிஜு ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் எக்ஸ் வலைதளம் வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ப. சிதம்பரம், ஆளுநர் ஆர்.என். ரவி ஆகியோரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநர் குலாம் சந்த் கட்டாரியா, கேரள முதல்வர்பினராயி விஜயன்,ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அகிலேஷ் யாதவ், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இங்கிலாந்து ஏம்ஸ்பரி நகரத்தின் மேயர் மோனிகா தேவேந்திரன், கவிஞர் வைரமுத்து, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரும் எக்ஸ் வலைதளம் மூலமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சமூக வலைதளம் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
* முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தோர் விவரம்:
சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, அமைச்சர் துரைமுருகன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கே.என். நேரு உள்ளிட்ட அமைச்சர்கள், டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர் தங்கபாலு, மதிமுக பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ, நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் சண்முகம், முன்னாள் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், முன்னாள் மாநிலச் செயலாளர் முத்தரசன், துணை செயலாளர்கள் ரவி, பெரியசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினர்கள் பாபு, எஸ்.எஸ்.பாலாஜி, துணைப்பொதுச்செயலாளர் வன்னியரசு, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது, மாநில அமைப்புச் செயலாளர் ஷேக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவன தலைவர் தனியரசு, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளர் எல்.கே. சுதீஷ், துணை பொதுச்செயலாளர்கள் சந்திரன் மற்றும் பன்னீர்செல்வம், திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் வீரபாண்டியன், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான், ஆதித்தமிழர் கட்சியின் மாநிலத் தலைவர் ஜக்கையன், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர் வசீகரன், தமிழ் மாநில தேசிய லீக் பொதுச்செயலாளர் திருப்பூர் அல்தாப், இந்திய தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா, ஈரோடு புதிய திராவிடர் கழகத் தலைவர் ராஜ்குமார், வீர முத்தரையர் முன்னேற்றக் கழகத் தலைவர் செல்வக்குமார், மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் மற்றும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அதேபோல், தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்தார்.
டி.வி.எஸ். குழுமத்தின் தலைவர் வேணு சீனிவாசன், நல்லி குப்புசாமி, விஜிபி குழுமத்தின் தலைவர் வி.ஜி.சந்தோசம், அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவரும், தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச்செயலாளருமான கண்ணையா, மோகன் ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்தனர். தனது பிறந்த நாளில் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து கொண்டார்.
