தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 8 தொகுதிகள் உள்ளது. அதில் முக்கிய தொகுதியாக பாபநாசம் உள்ளது. ஜெயலலிதா இருந்த காலத்தில் கடந்த 2006, 2011, 2016 தேர்தலில் அதிமுக சார்பில் பாபநாசம் தொகுதியில் துரைக்கண்ணு போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராக பதவி வகித்து வந்தார்.
துரைக்கண்ணு இறந்ததும் அவரது மகன் துரை.சண்முக பிரபு, தனது தந்தை போட்டியிட்ட தொகுதியான பாபநாசம் தொகுதியில் போட்டியிட 2021 சட்டமன்ற தேர்தலில் விருப்ப மனு அளித்திருந்தார். ஆனால், இந்த தொகுதியில் போட்டியிட கோபிநாதன் என்பவருக்கு எடப்பாடி சீட் கொடுத்தார். துரை.சண்முகத்துக்கு கொடுக்கவில்லை. இதனால் அப்செட் ஆன துரை.சண்முகத்தை, எடப்பாடி சமாதானப்படுத்தி அடுத்த முறை சீட் கொடுப்பதாக உறுதி அளித்திருந்தார்.
அந்த தேர்தலில் கோபிநாதன் படுதோல்வி அடைந்தார். திமுக கூட்டணியில் மமக ஜவாஹிருல்லா 70,294 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கடந்த 2021ல் எடப்பாடி உறுதி அளித்தப்படி 2026 தேர்தலில் நமக்கு தான் சீட் என்ற எண்ணத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணு மகன் துரை.சண்முக பிரபு, தந்தை வெற்றி பெற்ற பாபநாசம் தொகுதி முழுவதும் ஆதரவாளர்களுடன் களத்தில் இறங்கி பிரசாரத்திற்காக பணத்தை வாரி வழங்கி வருவதாக தெரிகிறது.
ஆனால் இந்த முறை அதிமுக கூட்டணியில் உள்ள அமமுக மாநில துணை பொது செயலாளரான முன்னாள் எம்எல்ஏ ரெங்கசாமி போட்டியிட முடிவு செய்து தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளார். இந்த தகவல் தெரிய வந்த துரை.சண்முக பிரபு, 2வது முறையும் ஏமாற்றி விட்டார்களே என கடும் அப்செட்டில் இருந்து வருகிறாராம்.
