தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என கடந்த 28.2.2015ம் ஆண்டின் ஒன்றிய பாஜ அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதன்பிறகு 5 இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டு, இறுதியாக மதுரை தோப்பூர் பகுதியில் அமைக்க சுமார் 224 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. 27.1.2019ல் மதுரையில் நடந்த விழாவில் பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டினார். அப்போது 18 மாதங்களில் முதல்கட்ட பணிகள் நிறைவடையும்.
3 ஆண்டிற்குள் எய்ம்ஸ் மருத்துவமனை பயன்பாட்டுக்கு வருமென அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை முதல்கட்ட கட்டுமானப்பணிகளே முழுமையாக நிறைவடையவில்லை. 9 ஆண்டுகளுக்கு பின்… தமிழ்நாடு தவிர்த்து மற்ற மாநில எய்ம்ஸ்களுக்கு ஒன்றிய அரசின் நிதியுதவியும், தமிழ்நாட்டிற்கு மட்டும் ஜப்பான் நாட்டு நிறுவன நிதியுடன் பணிகள் துவங்கும் என அறிவிக்கப்பட்டது. எய்ம்ஸ் பணிகளை துவக்க வேண்டுமென திமுக உள்ளிட்ட பலரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்தனர். நீதிமன்றங்களில் கூட வழக்கு தாக்கல் செய்யப்பட்டன.
நிலம் உள்ளிட்டவை தமிழ்நாடு அரசால் முறையாக ஒப்படைக்கப்பட்டும் கட்டுமானப்பணிகள் நடந்தபாடில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்பட்ட நிலையில் மருத்துவக் கல்லூரிக்கான வகுப்புகள் மட்டும் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. அறிவிக்கப்பட்டதில் இருந்து 9 ஆண்டுகளுக்கு பிறகு 2024, மே மாதம் கட்டுமான பணிகளுக்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டு பணிகள் துவங்கின. இந்த கட்டுமான பணிகள் இரண்டு கட்டங்களாக 33 மாதங்களில் நிறைவடையும் என அப்போது கூறப்பட்டது.
* சொன்னது என்னாச்சு…
முதற்கட்டத்தில் கல்வி வளாகம், வெளிநோயாளிகள் மருத்துவ சேவைகள், மாணவ, மாணவியர் தங்கும் விடுதிகள் மற்றும் அத்தியாவசிய சேவை கட்டிடங்கள் போன்ற முக்கிய கட்டிடங்களுக்கான முதற்கட்டப் பணிகள் துவக்கப்பட்ட தேதியிலிருந்து 18 மாதங்களுக்குள் அதாவது டிசம்பர் 2025ல் முடிவடையும். அதன்பின் நடக்கும் இரண்டாவது கட்டத்தில் மீதமுள்ள உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
முழு கட்டுமான பணிகள் பிப்ரவரி 2027க்குள் 33 மாதங்களில் நிறைவடையும் என கூறப்பட்டிருந்தது. ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் ஹனுமந்தராவ் கூறியிருந்தபடி, முதல்கட்ட பணிகள் கடந்த டிசம்பரில் நிறைவடையவில்லை. மொத்தமுள்ள 33 பிளாக்குகளில் (கட்டிடங்களில்) தற்போது மின் நிலையம், உணவு விடுதி, தங்கும் விடுதி ஆகிய பிளாக் கட்டிடங்கள் என 80 சதவீத கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது.
மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை, வெளி நோயாளிகள், உள் நோயாளிகள் பிரிவு உள்ளிட்டவைகளில் மருத்துவக்கல்லூரி கட்டிடத்தில் சுமார் 50 முதல் 70 சதவீத பணிகளே நிறைவடைந்து தற்போது சுற்றுச்சுவர் வண்ணம் பூசப்பட்டு கண்ணாடி ஜன்னல், லிப்ட், ஏசி ஆகியவை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
* ஹெல்மெட் கட்டாயம்…
இதை தவிர மற்ற பிளாக்குகள் சிலவற்றில் 10 முதல் 30 சதவீத பணிகளே நடைபெற்றுள்ளன. சில பிளாக்குகளில் 50 முதல் 70 சதவீத பணிகள் நடைபெற்றுள்ளன. மேலும் மருத்துவக்கல்லூரி மற்றும் வெளி நோயாளிகள், மருத்துவமனை ஆகிய கட்டிடங்கள் தொடர்ச்சியாக ஒரே பிளாக்கில் வருவதால் ஒரு புறம் வேலை முடிந்தாலும் அதே பிளாக்கில் மற்றொரு புறம் பணி நடைபெற்று வருவதால் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஹெல்மெட் அணிந்து தான் உள்ளே செல்ல வேண்டி வரும்.
* முடியவே இல்லை…
முக்கிய நுழைவாயிலில் இருந்து மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி கட்டிடத்திற்கு ஒரு கிலோ மீட்டருக்கு அதிகமான தூரம் வரை செல்ல இதுவரை சாலைகள் ஏதும் அமைக்கப்படவில்லை. இந்த நிலையில் தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் மதுரை எய்ம்ஸ் விவகாரம் மீண்டும் பேசுபொருளாகும். அதிமுக – பாஜ கூட்டணிக்கு எதிராக எய்ம்ஸ் கையில் எடுக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
இதனால், தங்களுக்கு எதிராக பிரசாரத்தை முறியடிக்க வேண்டுமென்ற நோக்கில் முதல்கட்ட பணிகளே முழுமையாக முடியாத நிலையில் அரைகுறை பணிகளுடன், அவசர கதியில் திறப்பு விழா நடத்த திட்டமிட்டிருந்தனர். நேற்றைய தினம் மதுரை வந்த பிரதமர் மோடி நலத்திட்ட நிகழ்ச்சி மற்றும் தேஜ கூட்டணி பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்னரே பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தியிருந்தனர்.
ஆனால், பணிகள் வழக்கம்போல மந்தமாக நடந்ததால், முதல்கட்ட கட்டுமான பணிகளை பிரதமர் வருவதற்குள் நிறைவு செய்ய முடியவில்லை. இதனால் பிரதமரின் நேற்றைய மதுரை நிகழ்வில் எய்ம்ஸ் பற்றி வாய் திறக்கவில்லை. கட்டிடத்தையும் திறக்காமல் சென்று விட்டார். இதனால் தமிழக மக்கள் கடும் ெகாந்தளிப்பில் உள்ளனர்.
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு 2019 எம்பி தேர்தலுக்கு முன் அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. அதன் பின்னர் 2 எம்பி தேர்தல் நடந்து முடிந்து விட்டது.
தமிழகத்தில் 2016, 2021ல் 2 சட்டப்பேரவை தேர்தல்களும் நடந்து விட்டன. விரைவில் 3வது சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. அடிக்கல் நாட்டியும் 7 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. பாஜ அரசை பொறுத்தவரை எய்ம்ஸ் விவகாரத்தை தேர்தல் நேரத்தில் மட்டுமே எடுக்கிறது. தேர்தல் டிராமா போல அல்லாமல், தமிழகத்தோடு அண்டை மாநிலமான கேரளாவும் பயன்பெறும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க பாஜ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
* தமிழ்நாட்டிற்கு துரோகம்
இதுகுறித்து மக்கள் கூறுகையில், ‘‘திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 15 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்த திட்டம். அதனாலேயே பாஜ அரசு இதை நீண்ட காலமாக கிடப்பில் போட்டுள்ளது. பலகட்ட போராட்டத்திற்கு பின்னர் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் ஒதுக்காத பாஜ அரசு மற்ற மாநில எய்ம்ஸ் மருத்துவமனைகளை ஒன்றிய அரசின் நிதியில் கட்டிவிட்டு, தமிழ்நாட்டிற்கு மட்டும் ஜப்பானிடம் நிதி கோரியதுஎப்போதும் போல பாஜ அரசு தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்கிறது.
கடந்த தேர்தலில் உதயநிதி பிரசாரம் எய்ம்ஸை மையப்படுத்தியே இருந்தது. ஒற்றை செங்கல்லுடன் அவர் செய்த பிரசாரத்துக்கு மக்கள் மத்தியில் ஆதரவும் கிடைத்தது. இந்த ஆண்டும் அதேபோல் இருந்தால் தங்களுக்கு எதிரான ஆயுதமாக மீண்டும் இருக்கும் என்ற நினைப்பில் பாஜ அரசு அவசர கதியில் திறக்க திட்டமிட்டது. எவ்வளவு வேகமாக பணிகளை செய்தாலும், முழுமை அடையாததால் வேறு வழியின்றி இம்முறையும் எய்ம்ஸ் பற்றி பேசாமல் பிரதமரும், பாஜ கட்சியினரும் கடந்து சென்றிருக்கின்றனர்.
கட்டுமான பணிகள் முழுவதுமாக நிறைவடைந்த பின்னர் படுக்கை வசதி, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்த பின்னரே திறக்கப்பட வேண்டும். தேர்தலுக்காக திறக்கக் கூடாதுதமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது. நம் மக்கள் எப்போதும் ஏமாற மாட்டார்கள்’’ என்றனர்.
* அதிமுக எம்எல்ஏவே ஒப்புதல் வாக்குமூலம்
எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் குறித்து சமீபத்தில் பேசிய இயக்குனர் ஹனுமந்தராவ் மார்ச் மாதத்திற்கு பின்னரே இறுதியாண்டு மருத்துவ மாணவர்கள் ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு மாற்றம் செய்யப்படுவார்கள். ஜூன் மாதத்திற்கு பின்னரே வெளிநோயாளிகள் பிரிவு செயல்படும் எனவும் கூறியது குறிப்பிடத்தக்கது.
சில வாரங்களுக்கு முன் எய்ம்ஸ் கட்டிட பணிகளை ஆய்வு மேற்கொண்ட திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா எய்ம்ஸ் பணிகள் முழுமையாக முடியவில்லை என்பதை செய்தியாளர்களிடம் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
* மற்ற ஊர்களுக்கு வந்தது எப்படி?
2014 பாஜ அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நாக்பூர் (மஹாராஷ்டிரா), கோரக்பூர் (உ.பி), மங்கள்கிரி (ஆந்திரா), கல்யாணி (மேற்கு வங்கம்) ஆகிய இடங்களில் எய்ம்ஸ் மரு்ததுவமனைகள் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. மதுரை எய்ம்ஸ்க்கு பிறகு 2017ல் அறிவிக்கப்பட்ட குஜராத் (2024), ஜார்க்கண்டிலும் (2022) எய்ம்ஸ் திறக்கப்பட்டு விட்டது.
தமிழ்நாட்டோடு சேர்த்து அறிவிக்கப்பட்டதில் இமாச்சல் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், அசாம் மாநிலங்களில் எய்ம்ஸ் பயன்பாட்டுக்கு வந்து விட்டன. தமிழ்நாட்டுக்கு முழுமையாக எப்போது திறக்கப்படும் என்பதுதான் மிகப்பெரிய கேள்விக்குறி.
* கடற்கரை- எழும்பூர் 4வது ரயில் பாதையை பிரதமர் அர்ப்பணித்தார்
புதுச்சேரி நிகழ்ச்சியை முடிந்து ஹெலிகாப்டரில் தஞ்சாவூர் வந்த மோடி, அங்கிருந்து இந்திய விமானப்படை தனி விமானத்தில் நேற்று பிற்பகல் 2.50 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தார். அவரை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒன்றிய அமைச்சர்கள் பியூஷ் கோயல், எல்.முருகன், தமிழக அரசு சார்பில் அமைச்சர் எ.வ.வேலு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், டிடிவி.தினகரன், அன்புமணி, ஜிகே.வாசன், ஏசி.சண்முகம், மதுரை கலெக்டர் பிரவீன் குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், எஸ்பி அரவிந்த், மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்டோர் வரவேற்றனர்.
பின்னர், விமான நிலைய வளாகத்தில் நடந்த ஒன்றிய அரசு விழாவில் பங்கேற்றார். விழாவில், ரூ.4,400 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தேசிய நெடுஞ்சாலையில் மரக்காணம் – புதுச்சேரி பிரிவு மற்றும் பரமக்குடி – ராமநாதபுரம் பிரிவு ஆகியவற்றை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
தமிழகத்தில் மறுசீரமைக்கப்பட்ட 8 ரயில் நிலையங்களை பிரதமர் திறந்து வைத்து, சென்னை கடற்கரை – சென்னை எழும்பூர் 4வது பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளே வணக்கம். புனிதமான மதுரை மாநகருக்கு வந்துள்ளதை பெரும் கவுரவமாக உணர்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சி பயணத்துக்கு தலைவணங்குகிறேன்.
இத்திட்டங்கள் நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைத்து, ஊக்கப்படுத்தி பல லட்சம் மக்களின் வாழ்வை மேம்படுத்தி, வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும். 2009 – 2014 வரை தமிழ்நாட்டிற்கான ரயில் திட்டங்கள் ரூ.882 கோடியாக இருந்த நிலையில், 2026-27ல் ரூ.7,600 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் இந்திய ரயில்வே துறை சரித்திரபூர்வமான ஒரு மாற்றத்தை சந்தித்திருக்கிறது. சுமார் 9 மடங்கு வளர்ச்சி அதிகரித்திருக்கிறது.
2047ம் ஆண்டிற்குள் வளர்ச்சி அடைந்த தேசத்தை உருவாக்க வேண்டும். நாம் அனைவரும் ஒட்டுமொத்த வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க, வளர்ச்சி அடைந்த தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அளிக்கவும், மாநிலத்தின் முன்னேற்றத்தை உறுதி செய்யவும் ஒன்றிய அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.
* சென்னை-புதுச்சேரிக்கு 2 மணி நேரத்தில் செல்லலாம்
புதுச்சேரி லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் நேற்று நடந்த அரசு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ரூ.2,714 கோடிக்கு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்து பேசுகையில், ‘‘கிழக்கு கடற்கரை சாலை, ஜிஎஸ்டி சாலையை மேம்படுத்தும் பணிகள் சென்னைக்கான சாலை இணைப்பை விரைவாக்குகிறது. இதனால் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு 2 மணி நேரத்தில் செல்ல முடியும்.
புதுச்சேரி – கடலூர் தேசிய நெடுஞ்சாலையை ஏற்கனவே முடித்துவிட்டோம். காரைக்கால் தேசிய நெடுஞ்சாலையும் விரைவாக முடிக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை சாலை திட்டங்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் புதுச்சேரியின் சில பகுதிகளை சென்னை, பெங்களூரு, கோயம்புத்தூர் போன்ற பொருளாதார மையங்களுடன் இணைக்கிறது. இதனால் புதுச்சேரி பொருளாதாரம் மேம்படும். சுற்றுலா, வர்த்தகம், தொழில் என எல்லாவற்றையும் மேம்படுத்தும்’’ என்றார்.
