ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டம் இருமண்டா கிராமத்தில் ஓஎன்ஜிசி குழாயில் எரிவாயு கசிவு..!!

ஆந்திரா: ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டம் இருமண்டா கிராமத்தில் ஓஎன்ஜிசி குழாயில் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இருமண்டா கிராமத்தில் உள்ள குழாய் ஒன்றிலிருந்து திடீரென அதிக அழுத்தத்துடன் எரிவாயு கசிவு தொடங்கியது. சில நிமிடங்களிலேயே எரிவாயு கிராமம் முழுவதும் பரவியதால் பதற்றம் ஏற்பட்டது. இதனை கண்ட கிராமமக்கள் உடனடியாக ஓஎன்ஜிசி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ளவர்களை வருவாய் துறையினர் அந்த கிராமத்திலிருந்து அப்புறப்படுத்தினர்.

அதுமட்டுமல்லாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனர். தீவிபத்துகளை தவிர்க்க மக்கள் யாரும் நெருப்பை பயன்படுத்த வேண்டாம். தீக்குச்சி, அடுப்பு பற்றவைப்பது உள்ளிட்ட நெருப்புகளை பற்ற வைக்க வேண்டாம் எனவும் வருவாய் துறை அறிவுறுத்தியது. அதே போல் தற்போது சம்பவ இடத்திற்கு ஓஎன்ஜிசி தொழில்நுட்ப வல்லுநர்கள் வந்துள்ளனர். மேலும், மீட்பு படையினரும், தீயணைப்பு படையினரும் தயார் நிலையில் உள்ளனர். எரிவாயு கசிவு தீ பிழம்பாக இருப்பதால் உள்ளே சென்று தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது வரை பாதிப்போ, உயிர்சேதமோ இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

Related Stories: