திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மீதமிருந்த நகைகளையும் திருட திட்டம் தீட்டியிருந்தனர் என்று கேரள உயர்நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் திருடப்பட்டது தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. துவாரபாலகர் சிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்கத்தை திருடியதில் 15 பேர் மீதும், கதவு, நிலை ஆகியவற்றில் பதிக்கப்பட்டிருந்த தங்கத்தை திருடியதில் 12 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த இரு வழக்குகளிலும் உண்ணிகிருஷ்ணன் போத்தி தான் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு நேற்று கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்தது.
அதில் கூறியிருப்பது: சபரிமலையில் தங்கம் திருடப்பட்ட விவகாரத்தில் உண்ணிகிருஷ்ணன் போத்தி, சென்னை ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறுவன தலைமை அதிகாரி பங்கஜ் பண்டாரி மற்றும் கர்நாடக மாநில நகை வியாபாரி கோவர்தன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து தான் சதித்திட்டம் தீட்டினர். கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் இந்த விவகாரம் கேரள உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்தது.
இதுகுறித்து அறிந்த இவர்கள் மூன்று பேரும், வழக்கு பதிவு செய்யப்பட்டால் எப்படி தப்பிப்பது என்பது குறித்து பெங்களூருவில் வைத்து ஆலோசனை நடத்தினர். இது தொடர்பான முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன. இவர்கள் சபரிமலை கோயிலில் மீதமிருந்த தங்கத்தையும் திருட திட்டமிட்டிருந்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
