லக்னோ: பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் 2ம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதில், தமிழ்நாடு உட்பட 11 மாநிலங்களில் எஸ்ஐஆர் கணக்கெடுப்பு பணிகள் முடிந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இறுதியில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பல்வேறு கால அவகாச நீட்டிப்புகளுக்கு பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
இதில், எஸ்ஐஆருக்கு முன்பாக 15 கோடியே 44 லட்சத்து 30 ஆயிரத்து 92 வாக்காளர்கள் இருந்த நிலையில் வரைவு வாக்காளர் பட்டியலில் 12 கோடியே 55 லட்சத்து 56 ஆயிரத்து 25 பேர் இடம் பெற்றுள்ளனர். 2.89 கோடி வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இது மொத்த வாக்காளர்களில் 18.70 சதவீதம். இது குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி நவதீப் ரின்வா அளித்த பேட்டியில், ‘‘எஸ்ஐஆருக்குப் பிறகு மாநிலம் முழுவதும் 15,030 புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
வரைவு பட்டியலில் 2.89 கோடி பேர் நீக்கப்பட்டுள்ளனர். இதில் 46.23 லட்சம் பேர் (2.99 சதவீதம்) இறந்தவர்கள் என்றும், 2.57 கோடி பேர் (14.06 சதவீதம்) நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் அல்லது கணக்கெடுப்பின் போது கண்டறியப்பட முடியாதவர்கள் என்றும், 25.47 லட்சம் பேர் (1.65 சதவீதம்) ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டவர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது’’ என்றார்.
