டெல்லி: டெல்லி கலவர வழக்கில் உமர் காலித், ஷர்ஜில் இமாமுக்கு ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. டெல்லியில் 2020ஆம் ஆண்டு நடந்த சிஏஏ போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. இந்த கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர். 700-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். டெல்லியில் கலவரத்தில் ஈடுபட்டதாக ஜேஎன்யு மாணவர் உமர் காலித் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
உமர் காலித், ஷர்ஜில் இமாம் மற்றும் 5 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 5 ஆண்டுகளாக உமர் காலித் உள்ளிட்ட 7 பேருக்கும் ஜாமின் மறுக்கப்பட்டதால் சிறையில் உள்ளனர். 7 பேரின் ஜாமின் மனுவை விசாரணை நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம் 2 முறை நிராகரித்துவிட்டது. இந்த நிலையில் 2020 டெல்லி கலவர வழக்கில் உமர் காலித், டீ ஷர்ஜில் இமாம் உள்ளிட்ட 7 பேர் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், 5 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் உமர் காலித், ஜர்ஜில் இமாமுக்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்தது. 5 ஆண்டாக சிறையில் இருக்கும் உமர் காலித், உச்ச நீதிமன்ற உத்தரவால் மேலும் ஓராண்டு சிறையில் இருக்க வேண்டும். உமர் காலித், ஷர்ஜில் இமாம் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் ஜாமீன் கோரி விண்ணப்பிக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
உமர் காலித், ஷர்ஜில் இமாம் தவிர மற்ற 5 பேருக்கும் உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மேலும், குல்பிஷா பாத்திமா, மீரான் ஹைதர், ஷிபா உர் ரகுமான், முகமது சலீம், ஷதாப் அகமது ஆகியோருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. சிறையில் உள்ள உமர் காலித்துக்கு நியூயார்க் மேயர் மம்தானி அண்மையில் கடிதம் எழுதியிருந்தார். உமர் காலித் மீது நியாயமான விசாரணை நடத்த அமெரிக்க எம்.பி.க்கள் குழுவும் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
