தெருவிளக்கு வசதியின்றி கிராம மக்கள் கடும் அவதி

பென்னாகரம், டிச.30: ஒகேனக்கல் முதலைப்பண்ணை பகுதியில் தெருவிளக்கு வசதியின்றி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் பல்வேறு இடங்களில் தெருவிளக்கு வசதியின்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக ஒகேனக்கல் -அஞ்செட்டி செல்லக்கூடிய பிரதான சாலையில், முதலைப்பண்ணை பகுதியில் தெருவிளக்கு இல்லாததால் இரவு நேரத்தில் கும்மிருட்டு நிலவி வருகிறது. இதனால், இரவு நேரங்களில் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. அத்தியாவசிய தேவைக்காக அந்த சாலையில் செல்லும் போது, செல்போனில் டார்ச் லைட்டை எரிய விட்டவாறு மின் அலுவலகம் முதல் முதலைப்பண்ணை வளைவு சாலை வரை செல்லும் நிலை உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, மின் அலுவலகம் முதல் முதலைப்பண்ணை சாலை வரை, தெருவிளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென உள்ளூர்வாசிகளும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: